“விஜய் எந்தக் காலத்திலும் பிரதமர் ஆக முடியாது.. அகலக்கால் வைப்பது ஆபத்தாகவே முடியும்” - கிருஷ்ணசாமி

  • மதுரை: "விஜய் எல்லாம் எந்தக் காலத்திலும் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடியாது. 5 வருடத்தை ஓட்டுவதற்கான வழியை முதல்வர் விஜய் பார்க்க வேண்டுமே தவிர, பிரதமர், சர்வதேச தலைவர் என்று நினைப்பதெல்லாம் தவறான ஆசை. அகலக் கால் வைத்தால் அது விஜய்க்கு தான் பாதிப்பாக அமையும்." என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, "நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, தேனி மாவட்டம் மேகமலை பகுதிகளில் வசிக்கும் மக்களை, வெளியேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து இப்பகுதி மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மக்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன என்பது குறித்து யாரும் பேசுவதில்லை. இந்த தீர்ப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

    Advertisement

    மாஞ்சோலை, மேகமலை பகுதிகளில் பல ஆண்டுகளாக வாழும் மக்களை வெளியேற்றுவதை கண்டித்து மதுரையில் செப்டம்பர் 12-ல் அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாஞ்சோலையில் தேயிலை தோட்டங்களை 99 வருட குத்தகைக்கு எடுத்திருந்த நிறுவனம் அரசுக்கு ரூ.4,655 கோடி குத்தகை பாக்கி வைத்துள்ளது. இப்பணத்தை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகமலை மற்றும் மாஞ்சோலை பிரச்சனைகளுக்கு தீர்வுகாண 2006 ஆம் ஆண்டின் வன உரிமை சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

    தமிழக வெற்றி கழகத்தால் அதிக பெரும்பான்மை பெற முடியவில்லை. தவெக பெரும்பான்மை இல்லாததால் கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்த்து ஆட்சி நடத்தி வருகிறது. ண்டுகளாக தங்களைத் தீவிரமாக எதிர்த்த கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். பிள்ளைகள் என்று பேசியவர்களோடு பொருந்தாத அணியாகச் சேர்ந்து இன்று இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தற்போது பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தவெக கூட்டணி கட்சிகளிடம் முரண்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    ஆதிதிராவிடர் நலத்துறையை தவெ அரசு சமூக நலத்துறை என மாற்றியதை வரவேற்றோம். ஆனால், சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு, ஆதிதிராவிடர் நலத்துறை என பேசியுள்ளார். அவர் குறிப்பிட்ட சாதியை மட்டும் முன்னிலைப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? செப்.11-ல் தவெக அரசு மற்றும் அமைச்சர் வன்னி அரசை கண்டித்து போரட்டம் தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் போராட்டம் நடத்தும். இனிமேல் ஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நலத்துறை என்றே அழைக்க வேண்டும்.

    தவெக அரசு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த திட்டத்துக்காக குறிப்பிட்ட கார்பரேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகமெங்கும் பல்லாயிரணக்கணக்காக தங்க நகை தொழிலாளர்கள் வேலையில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த தொழிலாளர்களுக்கு, தங்க மோதிரம் வழங்கும் திட்ட பணிகளை பிரித்து வழங்க வேண்டும். இதுபோல், பொங்கல் பண்டிகை இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அவர்களிடம் வழங்க வேண்டும்.

    Advertisement

    தமிழகத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு திட்டம் கூட உருப்படியாக தவெக உருவாக்கவில்லை. முன்யோசனை இல்லாமல், தவெக அரசு திட்டங்களை அறிவிக்கிறது. சமூக வலைதளங்கள் மூலம் ஒரு மாயை உருவாக்கி, விஜய்யை முதல்வராக மக்கள் அமர வைத்து விட்டார்கள். இதில் மக்கள் ஏமாந்தார்களா, ஏமாற்றப்பட்டார்களா என்பது தெரியவில்லை.

    விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று கூறுவது ஏற்புடையதல்ல. விஜயெல்லாம் எந்தக் காலத்திலும் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடியாது. 5 வருடத்தை ஓட்டுவதற்கான வழியை முதல்வர் விஜய் பார்க்க வேண்டுமே தவிர, பிரதமர், சர்வதேச தலைவர் என்று நினைப்பதெல்லாம் தவறான ஆசை. அகலக் கால் வைத்தால் அது விஜய்க்கு தான் பாதிப்பாக அமையும்.

    Advertisement

    சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தடுமாறுகிறார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் திராவிட மாடலின் கொள்கை தலைவர்களாக இருக்கும்போது, "என்னுடைய அரசியல் ஆசான் விசிக தலைவர் திருமாவளவன்" என உதயநிதி கூறுவது ஏற்புடையதா?

    சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலையில் பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக உள்ளது. தவெக அரசு ஒரு மதத்திற்கான, ஒரு சாதிக்கான ஆட்சியாகவே உள்ளது. அனைவருக்குமான, அனைத்து மதத்திற்குமான ஆட்சியாக மாற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “Vijay can never contest for Prime Minister. Instead of entertaining misguided ambitions of becoming Prime Minister or an international leader, Vijay should focus on how to successfully complete a five-year term as Chief Minister. Overreaching will only prove detrimental to him,” stated Krishnaswamy, leader of Puthiya Tamilagam.