சென்னை: தமிழக அரசியலில் இப்போது மிக அதிகமாக பேசப்படும் விஷயம் என்றால் அது "டிஜிட்டல் அரசியல்" தான். ஒரு காலத்தில் மேடைப்பேச்சு, தெருமுனை பிரச்சாரம், சுவரொட்டி, தொண்டர் வலையமைப்பு ஆகியவை தேர்தலை தீர்மானித்தன. ஆனால் இன்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் குறும்படங்கள், எக்ஸ் பதிவுகள், மீம்கள், இணைய டிரெண்ட்கள் ஆகியவை அரசியல் களத்தையே மாற்றி அமைத்து வருகின்றன. அதற்கான மிகப்பெரிய உதாரணமாக தற்போது பார்க்கப்படுவது தவெக மற்றும் திமுக இடையேயான டிஜிட்டல் மோதல் தான்.
நடிகர் விஜய் தலைமையிலான தவெக, கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே டிஜிட்டல் தளங்களை முழுமையாக பயன்படுத்தி இளைஞர்களை கவர்ந்தது. மாநாட்டு அறிவிப்புகள் முதல் அரசியல் கருத்துகள் வரை அனைத்தும் சமூக வலைத்தளங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டன.
விஜய்யின் அரசியல் பாணி, சினிமா வசனங்களை நினைவுபடுத்தும் ரீல்ஸ்கள், வேகமாக பரவும் வீடியோக்கள், ரசிகர்களின் இணைய ஆதரவு ஆகியவை இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, தேர்தலுக்கு முன்பே தவெக இணையத்தில் மிகப்பெரிய ஆதிக்கத்தை உருவாக்கியது.
"விசில்" சின்னம், விஜய்யின் பேச்சுகள், அரசியல் வீடியோக்கள் ஆகியவை தொடர்ந்து டிரெண்டாகின. இதுதான் திமுகவுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக மாறியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதிலும், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினே , நாங்கள் கோட்டை விட்ட இடம் இன்ஸ்டாகிராம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதுவரை பாரம்பரிய முறைப்படி பூத் லெவல் களப்பணியையே நம்பி வந்த திமுக, தற்போது தனது அரசியல் அணுகுமுறையை முழுமையாக மாற்றத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக "உடன்பிறப்பின் குரல்" என்ற புதிய இணைய தளத்தை திமுக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக கருத்துகளை பகிரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய பல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இணைய தள அரசியலில் தவெக உருவாக்கிய தாக்கத்தை எதிர்கொள்ள திமுக புதிய டிஜிட்டல் அணுகுமுறையை கையாள தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர், "இன்ஸ்டாகிராம் என்பது ஒரு தளம் மட்டுமே. உண்மையான அரசியல் இன்னும் தரை மட்டத்தில்தான் உள்ளது" என்று வலியுறுத்துகின்றனர். அவர்களது வாதம் என்னவென்றால், தவெக சமூக வலைத்தளங்களில் பெரிய அலை உருவாக்கியிருந்தாலும், அது முழுக்க சினிமா கவர்ச்சியை மையமாக கொண்டதாகும். நீண்ட கால அரசியல் என்பது கொள்கை, அமைப்பு, களப்பணி ஆகியவற்றின் மேல் தான் நிலைத்து நிற்கும் என்பதே திமுக தரப்பின் நிலைப்பாடு. இதற்காகவே தற்போது "விர்ச்சுவல் வாரியர்ஸ்" என்ற புதிய அரசியல் வார்த்தையும் பேசப்பட தொடங்கியுள்ளது. அதாவது, சமூக வலைத்தளங்களில் வெறும் ரசிகர் ஆதரவு மட்டும் அல்லாமல், கட்சியின் கொள்கைகளை ஆதாரங்களுடன் விளக்கும் நபர்களை உருவாக்க வேண்டும் என்பதே திமுகவின் புதிய திட்டமாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், தவெக ஆதரவாளர்கள் இதை வேறு கோணத்தில் பார்க்கின்றனர். இளைஞர்கள் அரசியலை டிஜிட்டல் தளங்களில் தான் பார்க்கிறார்கள். மக்கள் மொழியில் பேசினால்தான் அவர்கள் கவனிப்பார்கள் என்பது அவர்களது கருத்து. அதனால் தான் விஜய்யின் உரைகள், குறும்பட வடிவ அரசியல் பிரச்சாரங்கள், ரசிகர் பாணி அரசியல் வீடியோக்கள் ஆகியவை மிக வேகமாக மக்களிடம் சென்றதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசியல் விமர்சகர்கள் இந்த விவகாரத்தை இன்னும் ஆழமாக பார்க்கின்றனர். அவர்களுடைய கருத்துப்படி, திமுக தோல்விக்கு சமூக வலைத்தளங்கள் மட்டும் காரணமல்ல. உட்கட்சி அதிருப்தி, மாவட்ட அளவிலான பிரச்சனைகள், கூட்டணி குழப்பங்கள், சட்டம்-ஒழுங்கு குறித்த விமர்சனங்கள், இளைஞர்களின் மாற்ற மனநிலை ஆகிய பல காரணிகள் ஒன்றாக சேர்ந்து தாக்கம் ஏற்படுத்தியுள்ளன. அதேபோல் தவெக வெற்றிக்கும் வெறும் இன்ஸ்டாகிராம் மட்டும் காரணமில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். விஜய்யின் சினிமா புகழ், மாற்ற அரசியல் மீதான மக்களின் எதிர்பார்ப்பு, இளைஞர்களின் ஆதரவு, டிஜிட்டல் தளங்களை திறமையாக பயன்படுத்திய அணுகுமுறை ஆகியவை சேர்ந்து இந்த வெற்றியை உருவாக்கியதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். இப்போது தமிழக அரசியலில் ஒரு புதிய கட்டம் தொடங்கியுள்ளது. முன்பு தெரு அரசியல் மட்டுமே முக்கியமாக இருந்த நிலையில், தற்போது திரை அரசியல் மற்றும் டிஜிட்டல் அரசியல் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளது தமிழக அரசியலில் புதிய யுகத்தை தொடங்கியுள்ளது.டிஜிட்டல் அரசியல்
இன்ஸ்டாகிராம் அரசியல்
தவெக
விர்ச்சுவல் வாரியர்ஸ்
மக்கள் மொழி
திமுக
தமிழக அரசியல்