பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்?

  • சென்னை: தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களுக்குள் நடைபெறும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையான 118 கிடைக்கவில்லை. இதனால் 108 இடங்கள் பெற்ற தவெக, காங்கிரஸ் , விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

    Advertisement

    இந்த நிலையில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வென்றார். இரண்டில் வென்றிருந்தாலும் சட்டபடி ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார். அந்த தொகுதிக்கு மற்ற மாநில தேர்தல்களுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும் என சொல்லப்பட்டது.

    இந்த நிலையில் அதிமுக இரண்டாக பிளந்தது. அதில் சிவி சண்முகம்- வேலுமணி தலைமையிலான 25 சட்டசபை உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் அவர்களுக்கு எந்த இடமும் கொடுக்கவில்லை.

    Advertisement

    ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, அதிருப்தி எம்எல்ஏக்களின் கட்சி பதவியை பறித்து வரும் நிலையில் வேலுமணி தரப்பை சேர்ந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா ஆகியோர் இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்றுக் கொண்டார்.

    இதனால் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. இந்த தேர்தலில் பெருந்துறை தொகுதியில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    Advertisement

    பாஜகவில் புதிய பதவி தரவில்லை, 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை- இப்படியாக பாஜகவில் அண்ணாமலை தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இவர் பாஜக மாநில தலைவராக இருந்த போது, 2021 சட்டசபை தேர்தலில் 4 சட்டசபை உறுப்பினர்களை பெற்றுத் தந்தார். ஆனால் பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அந்த இடத்திற்கு வந்த நிலையில் அவரது தலைமையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வென்றுள்ளது.

    தமிழகத்தில் பாஜக மலர அண்ணாமலையை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் அண்ணாமலை மேற்கு மண்டலமான பெருந்துறை தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    Advertisement

    என்னதான் பெருந்துறைக்கு இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த ஜெயக்குமார் விசில் சின்னத்தில் போட்டியிட்டாலும், இந்த கட்சித் தாவலால் மக்கள் அந்த 3 எம்எல்ஏக்கள் மீது அதிருப்தியில் இருக்கக் கூடும். இதனால் அவர்களுக்கு வாக்களிப்பது சந்தேகம் என்பதால் இந்த வாய்ப்பை அண்ணாமலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்.

    அண்ணாமலைக்கு செல்வாக்கு இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். எனவே அதை நிரூபிக்க இந்த இடைத்தேர்தல்தான் சரியான நேரம் என்பதையும் அவர்கள் கருதுகிறார்கள். பாஜக தலைமையிடம் அண்ணாமலை சீட் கேட்பாரா, தலைமை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Advertisement

    அண்ணாமலை இடைத்தேர்தலில் போட்டியிட்டால் என்ன நடக்கும்?

    1. அண்ணாமலை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்; அவரது சமூகத்தில் அவருக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் கோவையிலிருந்து போட்டியிட்டார். மேற்கு மாவட்டத்தில் அவர் சமூகத்தினரின் செல்வாக்கு அதிகமாக உள்ள தொகுதியில் போட்டியிட்டால் கணிசமான வெற்றி வாய்ப்பு இருக்கும் என ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

    2. அண்ணாமலை 2021இல் தலைவரான பிறகு 234 சட்டமன்றத் தொகுதிகளையும் 7 மாதங்களில் நடைபயணம் செய்து 'என் மண், என் மக்கள்' யாத்திரை நடத்தினார். இந்த யாத்திரை பாஜகவுக்கு, மக்கள் செல்வாக்கை உருவாக்கித் தந்தது என சொல்லலாம்.

    3. 2024 பொதுத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் பாஜகவின் வாக்கு சதவீதம் சுமார் 8% அதிகரித்து 11% ஆனது - இது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று அவரே கூறியிருந்தார்.

    4. அண்ணாமலை சமூக வலைதளங்களில் ஒரு தனித்துவமான மக்கள் தொடர்பு கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார். இடைத்தேர்தல் போன்ற சிறிய களத்தில் இந்த சோசியல் மீடியா தொடர்பு பெரும் பலமாக அவருக்கு அமையும்.

    எதிர்மறையான காரணிகள்

    1. தேர்தல் தோல்விகளின் வரலாறு

    2024 பொதுத் தேர்தலில் கோவையிலிருந்து போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளர் கணபதி P ராஜ்குமாரிடம் தோற்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சியிலும் அவர் தோல்வியைத் தழுவினார். தொடர் தோல்விகளால் இவருக்கு கட்சியில் சீட் கொடுப்பதற்கு சிக்கல் ஏற்படும்.

    2. கட்சியில் தற்போதைய நிலை

    அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை இருந்ததாலும், அவரது தலைவர் பதவிக்காலம் முடிந்ததாலும் மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு நயினார் நாகேந்திரன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். எனினும் கடந்த தேர்தலில் நயினாரின் செயல்பாடுகள் தலைமைக்கு திருப்தியை கொடுக்கவில்லை. எனவே கட்சிக்குள் நயினாரின் நிலை பலவீனமாக இருக்கும் நேரத்தில் இடைத்தேர்தல் என்பது பாஜகவுக்கு ஒரு சவாலாக இருக்கும்.

    3. கூட்டணி அரசியலின் சிக்கல்

    அதிமுக- பாஜக கூட்டணியில் ஏதோ ஒரு காரணத்திற்காக அண்ணாமலைக்கு சீட் தர முடியாமல் போனது 2026 சட்டசபைத் தேர்தலிலேயே தெளிவானது. அப்படி இருக்கும் போது இடைத்தேர்தலிலும் கூட்டணியாக செயல்பட்டால் இவருக்கு சீட் கிடைக்குமா என்பது சந்தேகமே!