வீழ்ந்து கிடக்கும் தேமுதிக... செங்குத்தாக தூக்கி நிறுத்த ஒரு அதிரடி திட்டம்!


சென்னை: வாழ்ந்து கெட்ட கட்சி என்ற பெயருடன் வீழ்ந்து கிடக்கும் தேமுதிகவை தூக்கி நிறுத்த ஒரு அதிரடித் திட்டத்தை தேமுதிக தரப்பு தீட்டி வருவதாக கூறப்படுகிறது. அதாவது விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை களம் இறக்கப் போகிறார்களாம்.

யாருமே எதிர்பார்க்காதபோது அரசியலில் கால் பதித்தார் விஜயகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு அரசியல் பிம்பங்கள் இருந்தும் உள்ளே நுழைந்தார். ரஜினியே அரசியலுக்கு வர தயங்கிய காலகட்டத்தில், புயலென நுழைந்தார் விஜயகாந்த். முதல் தேர்தல் பிரச்சாரமே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. காரணம், விஜயகாந்த்தின் அந்த பேச்சில் உள்ள ஒவ்வொரு வரிகளும் சாதாரண மக்களுக்கு புரியாமல் போயிருக்கலாம். ஆனால் தடுமாறாத அந்த பேச்சை உன்னிப்பாக கவனித்த தலைவர்கள்தான் எத்தனை பேர் தெரியுமா?!

பண்ருட்டி ராமச்சந்திரன்

கட்சி ஆரம்பித்தபோதும், தேர்தலில் தனித்து நின்ற போதும் பல தரப்பினராலும் கடும் விமர்சனம் செய்யப்பட்டார். 27 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதுமட்டுமல்ல, பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, மற்றும் திமுகவின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவிற்கு மிகப்பெரிய சக்தியாகவும் மாறினார். அவரது அணுகுமுறையும் நடைமுறையும் மிகவும் பக்குவமாக இருந்தது. அதற்கு காரணம் ஒருவேளை அப்போது உடனிருந்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனின் வழிகாட்டுதலாக கூட அது இருக்கலாம்.

தலைவர் அடிக்கலாமா?

விஜயகாந்த் மீது பெரும்பாலும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அல்லது எதிர்மறையான கருத்து என்னவென்றால், தொண்டர்களை பொது இடத்தில் அடித்துவிடுவது என்பதே. ஒரு தலைவர் தனது கட்சியின் வேட்பாளரையோ தொண்டர்களையோ பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அடித்து நொறுக்குதுவது என்பது மோசமான செயல்தான். ஒரு அரசியல் கட்சி தலைவர் வேட்பாளரை பொது இடத்தில் அடிப்பது என்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், கட்சி தலைவர் தவறு செய்யும் கட்சி நிர்வாகிகளை ரகசியமாக தோட்டத்துக்கு அழைத்து அடித்து உதைத்து மிரட்டியதையெல்லாம் தமிழக மக்கள் அறிந்துதான் இருந்தார்கள்.

வாய்ப்பை தவறவிட்டார்

தமிழக அரசியலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக அரசியல் களமிறங்குபவர்களை திராவிட கட்சிகள் சூழ்ச்சி செய்து எப்படி வேட்டையாடுகிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் விஜயகாந்த்தான். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அரசியல் களம் கண்டு தொடர்ந்து தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபித்துக் காட்டியவர் விஜயகாந்த். பின்னர், அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவரானார். ஒரு எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் சிறப்பாக செயல்பட்டு சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளை முழங்கி அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பை விஜயகாந்த் தவறவிட்டுவிட்டார்.

திமுக-தேமுதிக

சட்டப்பேரவையில் சிறப்பாக செயல்பாடாத சூழலில் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்க ஆரம்பித்தது. அனல் பறக்கும் தனது சினிமா வசனங்களைப் போல, அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசிவந்த விஜயகாந்த் பேசவே தடுமாறினார். ஒரு கட்டத்தில் அவர் பேசுவதே புரியாமல் போனது. தமிழக அரசியலில் ஒரு அரசியல்வாதிக்கு மிகப்பெரிய பலமே பேச்சுதான். விஜயகாந்த் எப்போது தனது பேச்சை இழந்தாரோ அப்போதே அவர் முழுமையாக வீழ்ந்துவிட்டார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவினர் பலரும் திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பப்பட்டனர். ஆனால் விஜயகாந்த்துடைய இலக்கு முதல்வராக வேண்டுமென்பதுதான். ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த், திமுகவுடன் கூட்டணி அமைத்தால் தம்மால் முதல்வராக ஆக முடியாது என்று நினைத்தார்.

காலியாகும் கூடாரம்

தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், விஜயகாந்த்தின் பலவீனத்தை அறிந்து அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். அதனை 2 திராவிட கட்சிகளுமே தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக மேலும் தூண்டிவிட்டார்கள். நேரடியாகவும் மறைமுகமாவும் மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டதும், விஜயகாந்த் குடும்பத்தின் அளவுகடந்த தலையீடும் காரணமாக தேமுதிக கூடாரம் காலியாக தொடங்கியது. கட்சிக்குள்ளேயே போர்க்கொடி தூக்கப்பட்டது. இந்த போர்க்கொடிக்கு பின்னணியில் திமுகவும் அதிமுகவும் இருந்ததாகவும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. விளைவு விஜயகாந்த் கண்ணெதிரிலேயே தேமுதிக கரைய ஆரம்பித்தது. காலம் கூடிவந்த வேளையில், விஜயகாந்த்தை அவரது உடல்நிலை கைவிட்டது. அதற்கு அவரேதான் காரணம்!!

விஜய பிரபாகரன்

விஜயகாந்த் என்ற பிம்பம் சரியத்துவங்கியவுடன், மிச்சம் இருப்பவர்களும் மாற்று கட்சியை தேடி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி பொறுப்பும் தரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குடும்பத்தாரின் தலையீடுகளினால்தான் கட்சியை இழந்ததாக நிர்வாகிகள், தொண்டர்கள் கருதினர். தற்போது உடல்நலத்தையும் இழந்துள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்த் மட்டும்தான்

இதில் விஜயபிரபாகரனுக்கு பொறுப்பை கொடுத்தால் அது கட்சியில் விஜயகாந்த்துக்காகவே காத்துக் கிடந்த மூத்த நிர்வாகிகளுக்கு அதிருப்தியை கண்டிப்பாக உண்டுபண்ணும். அதுவும் இல்லாமல் விஜயகாந்த்தை மனசார ஏற்றுக் கொண்ட மக்கள், அவர் இடத்தில் வேறு யாரையும் ஏற்றுக் கொள்ள எக்காலமும் முன்வரமாட்டார்கள். தேமுதிக என்ற இயக்கமே விஜயகாந்த் என்ற பிம்பத்தை மட்டுமே வைத்துதான். எனவே இவருக்குப் பதில் இவர் என்ற டிவி சீரியல் முடிவுகளை நிஜத்தில் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா.. என்பது சந்தேகமே.

Have a great day!
Read more...

English Summary

Will the DMDK be strong again?