ஆர்எஸ்எஸ் யூனிபார்மில் ஸ்ரீதர் வேம்பு.. தென்காசி பேரணியில் பங்கேற்றார்.. டிரெண்டாகும் போட்டோ

  • தென்காசி: இன்று தமிழ்நாடு முழுக்க 100+ மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்ட நிலையில், ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவும் இதில் கலந்து கொண்டார். ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்து பேரணியில் அவர் கலந்து கொண்டது இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் விஜயதசமி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பேரணி நடத்தப்பட்டது. முதலில் இந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில், நீதிமன்ற தலையீட்டிற்கு பிறகே அனுமதி வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த பாத சஞ்சலன் அணிவகுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

    Advertisement

    ஆர்எஸ்எஸ் பேரணி

    கடந்த அக்டோபர் 25ஆம் தேதி சில பகுதிகளில் முதல் கட்ட பேரணிகள் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று நவம்பர் 1ஆம் தேதி பல்வேறு இடங்களில் பேரணிகள் நடந்தன. இதில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற பேரணியில் ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டார். பேரணியில் ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்து பேரணியில் அவர் கலந்து கொண்டது இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பாஜகவின் தென்காசி மாவட்ட தலைவர் அனந்தன் ஐயாசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதர் வேம்புவுடன் பேரணியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அனந்தன் ஐயாசாமி மேலும் கூறுகையில், "ஸ்ரீதர் வேம்பு முதலில் தென்காசியில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். ஆனால், வேறு திட்டம் இருந்ததால் தென்காசி பேரணியில் பங்கேற்க முடியாமல் போனது. பின்னர் சங்கரன்கோவிலில் நடைபெற்ற அணிவகுப்பில் கலந்து கொண்டார்" என்றார்.

    நிதியுதவி

    மேலும், தென்காசி பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளில் ஸ்ரீதர் வேம்பு தொடர்ந்து கலந்து கொண்டு வருவதாகவும், உள்ளூர் கூட்டங்களான பைடக் நிகழ்வுகளில் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார். 'பண்பாட்டு வகுப்புகள்' மற்றும் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் குறித்த வார இறுதி வகுப்புகளுக்கும் ஸ்ரீதர் வேம்பு நிதியுதவி அளித்து வருவதாக கூறினார்.

    Advertisement

    ஸ்ரீதர் வேம்பு பேச்சு

    ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, தன்னிறைவு, தேசிய உணர்வு மற்றும் நாட்டை கட்டமைப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு குறித்து பேசியதாகவும் அனந்தன் ஐயாசாமி தெரிவித்துள்ளார். சாதி அல்லது பணக்காரர்களா என்ற அடிப்படையில் ஆர்எஸ்எஸ் யாருக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதில்லை என்றும் இளைஞர்கள் நாட்டை கட்டமைக்கும் பணிகளில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு பேசியதாக அவர் கூறினார்.

    மேலும், 2023 டிசம்பரில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மேற்கொண்ட நிவாரண பணிகளையும் ஸ்ரீதர் வேம்பு நினைவுகூர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவா பாரதி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் நூற்றுக்கணக்கான தொண்டர்கள், இந்துக்கள் அதிகம் இல்லாத பகுதிகளிலும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதை ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியதாக அனந்தன் கூறியுள்ளார்.

    Advertisement

    ஸ்ரீதர் வேம்பு

    முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஸ்ரீதர் வேம்பு தனது கடந்த காலம் குறித்து விவரித்திருந்தார். அதாவது 14 வயதில் மார்க்சிய ஆசிரியரின் தாக்கத்தால் தற்காலிகமாக மார்க்சியராகவும் நாத்திகராகவும் மாறியதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருந்தார். 6 முதல் 9ஆம் வகுப்பு வரை திமுகவுடன் தொடர்புடைய ஒருவரால் தொடங்கப்பட்ட பள்ளியிலும், 10 முதல் 12ஆம் வகுப்பு வரை ஆர்எஸ்எஸ் தொடர்புடைய ஒருவர் நிதியுதவி அளித்த பள்ளியிலும் படித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    English Summary

    Zoho founder Sridhar Vembu participated in an RSS march in Sankarankovil wearing the organisation's uniform(ஆர்எஸ்எஸ் பேரணியில் ஸ்ரீதர் வேம்பு): Sridhar Vembu Joins RSS Rally latest news in tamil.