100-க்கு 101 மார்க் வாங்கிய தஞ்சை மாணவி.. சென்டம் கனவில் விழுந்த அடி! விடைத்தாள் நகலில் என்ன நடந்தது

  • தஞ்சாவூர்: பொதுத்தேர்வு ரிசல்ட் வந்தாலே மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒருவித படபடப்பு தொற்றிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால், தஞ்சாவூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை பார்த்த ஒரு மாணவியின் குடும்பமும், கல்வித்துறையுமே அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டது.. காரணம், அந்த மாணவிக்கு தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு அல்ல, அதையும் தாண்டி 101 மதிப்பெண்கள் போடப்பட்டிருப்பதுதான்..!

    Advertisement

    கேட்பதற்கே வினோதமாக இருக்கும் இந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் நடந்திருக்கிறது. இங்கு வசிக்கும் விவசாயக் கூலித் தொழிலாளியான முரளிதரனின் மகள் ஹரிப்பிரியா, பூதலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருந்தார்.

    Advertisement

    தஞ்சை அரசு பள்ளி மாணவி

    அனைத்து தேர்வுகளையும் சூப்பராகவே எழுதியிருந்தார்.. இதையடுத்து, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் வாங்கி அசத்தியிருந்தார். ஒட்டுமொத்தமாக 500-க்கு 500 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு, ரிசல்ட்டில் 486 மதிப்பெண்கள் மட்டுமே வந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. அதிலும் தமிழ்ப் பாடத்தில் மட்டும் 9 மதிப்பெண்கள் குறைந்திருந்தது ஹரிப்பிரியாவை நிலைகுலைய வைத்தது.

    நன்றாகத்தானே தமிழ தேர்வு எழுதினோம்? எங்கே மதிப்பெண் குறைந்தது? என்று குழப்பமும், சந்தேகமும் அடைந்தார்.. எங்கே தவறு நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே, முறைப்படி பணம் கட்டித் தன்னுடைய தமிழ்ப் பாட விடைத்தாளின் நகலை வாங்கிப் பார்த்தார் ஹரிப்பிரியா.

    Advertisement

    100-க்கு 101 மார்க்

    அப்போதுதான் ஆசிரியர்கள் செய்த அடுக்கடுக்கான குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அந்த விடைத்தாளின் முதல் பக்கத்தில் மாணவி ஹரிப்பிரியா பெற்ற மதிப்பெண் 101 என்று குறிக்கப்பட்டிருந்தது! வினா வாரியாகக் கூட்டும்போது 15+21+65=101 என்றும், பக்கவாரியாக மதிப்பெண்களைக் கூட்டும்போது 38+56+7=101 என்றும் மிகத் தெளிவாகக் கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் வினோதம் என்னவென்றால் விடைத்தாள் திருத்திய ஆசிரியர், இந்த 2 இடங்களிலுமே கூட்டுத்தொகை 91 என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த 101 மதிப்பெண் எப்படி வந்தது? என்று விடைத்தாளை அலசி ஆராய்ந்தபோதுதான், திருத்திய ஆசிரியர்களின் தப்பு கண்டுபிடிக்கப்பட்டது.. மாணவி 100 மதிப்பெண்களுக்கு முழுமையாக விடை எழுதியிருந்தாலும், 3 விடைகளில் தலா ஒரு மதிப்பெண் வீதம் குறைந்து 97 மதிப்பெண்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் விடைத்தாளில் வினா எண்கள் 38 மற்றும் 39க்கு அதிகபட்ச மதிப்பெண்ணான 5-க்கு மேல், கூடுதலாக 7 மதிப்பெண்களை அள்ளி போட்டிருக்கிறார்கள்.. அதனால் 4 மார்க் எக்ஸ்ட்ராவாகச் சேர்ந்து கூட்டுத்தொகை 101 என்று வந்துவிட்டது.

    Advertisement

    விடைத்தாள் நகலில் வந்த தப்பு

    இதில் ஹைலைட் என்னவென்றால், விடைத்தாளை முதன்முதலில் திருத்தியவர், அதை மீண்டும் கூர்ந்தாய்வு (Scrutiny) செய்தவர், அதன்பின் சரிபார்த்த தலைமைத் தேர்வாளர் (Chief Examiner) ஆகிய 3 பேருமே இப்படியொரு தவறை கவனிக்காமல் அப்படியே கோட்டை விட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், ஆன்லைன் மதிப்பெண் லிஸ்ட்டில் மாணவிக்கு 91 மதிப்பெண்கள் என்று ஏனோதானோவென்று பதிவும் செய்துள்ளனர்.

    ஆசிரியர்களின் இந்த மெத்தன போக்கால் மனமுடைந்த மாணவி ஹரிப்பிரியா, தஞ்சையில் உள்ள தேர்வுத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் இப்போது மறுகூட்டலுக்காக மறுபடியும் விண்ணப்பித்துள்ளாராம்.

    சென்டம் கனவில் விழுந்த அடி

    "நான் நன்றாகப் படித்தும், ஆசிரியர்கள் மிகவும் அலட்சியமாக விடைத்தாளைத் திருத்தியதால்தான் எனக்கு மதிப்பெண் குறைந்துள்ளது என்பது விடைத்தாள் நகல் மூலம் உறுதியாகிவிட்டது. விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் இனிவரும் காலங்களிலாவது கவனமாகச் செயல்பட வேண்டும்" என்று மாணவி மிகுந்த வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    ஒரு மாணவியின் எதிர்காலத்தோடு விளையாடிய ஆசிரியர்களின் இந்த அலட்சியம், இப்போது கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! டெக்னிக்கல் கோளாறால் நடந்த இந்த சிறு தவறுதான், பரபரப்பையும், சோஷியல் மீடியாவில் செம சுவாரசியமான விவாதத்தையும் கிளப்பிவிட்டுச் சென்றுள்ளது...!

    English Summary

    101 Marks Out of 100? Thanjavur 10th Student Checks Her Tamil Exam Answer Sheet Copy; What Happened Next?