அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு தவெக அரசு தந்த ட்விஸ்ட்.. உதயநிதி பேச்சு

  • தஞ்சாவூர்: இன்னைக்கு தமிழ்நாடு இவ்வளவு பெரிய ஒரு பேரிடரில் மாட்டிக்கிட்டு இருக்கு. இந்த பேரிடரில் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பு என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் பேசினார். பயிர் கடன் தள்ளுபடி குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், இப்போது ஒரே வீட்டில் இரண்டு பேர், மூன்று பேர் கடன் வாங்கியிருந்தாலோ, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் வாங்குபவர்கள் இருந்தாலோ, அவர்களுக்கெல்லாம் பயிர் கடன் தள்ளுபடி இல்லை என்பதையும் அறிவித்திருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

    Advertisement

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய உதயநிதி, "இன்று அமைந்திருக்கக்கூடிய இந்த 'சோபா மாடல்' ஆட்சியினுடைய போலி பிம்பம், கடந்த ஒரு மாதத்தில் அடித்து, துவைக்கப்பட்டு, நொறுங்கிக் கிடக்கின்றது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியினுடைய அவலங்களை எல்லாம் மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    இன்று இந்த அரசின் தவறுகளையும் சறுக்கல்களையும் எல்லாம் இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் தட்டிக்கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், அப்படித் தட்டிக்கேட்கிற இளைஞர்களையும் நம்முடைய கழகத்தினரையும் கைது செய்கிற வேலையை இன்று இந்த 'சோபா மாடல்' அரசு தொடங்கியுள்ளது. ஆகவே, இதுபோன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்ள நிச்சயம் நமக்கு நிறைய வழக்கறிஞர்கள் தேவை. அந்த வகையிலே, இந்த மேடையிலே நமக்கு இரண்டு வழக்கறிஞர்கள், அதுவும் ஜோடியான வழக்கறிஞர்கள் நம்முடைய இயக்கத்திற்குக் கிடைத்துள்ளனர்.

    'தூய சக்தி, தூய சக்தி' என்று சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார்கள் என்று நீங்கள் அத்தனை பேரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தாவது நிமிடமே குதிரை பேரத்தைத் தொடங்கினார்கள். பிற கட்சிகளுக்கு முதற்கண் சோபா போகும்; சோபாவிற்குப் பின்னாடியே நம்முடைய முதலமைச்சர் துரத்திக்கொண்டே போவார், சோபாவைத் துரத்திக்கொண்டே போவார். அப்புறம் முதலமைச்சர் பின்னாலேயே அண்ணாதுரை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ராஜினாமா கடிதத்தோடு அவர்களும் வரிசையில் வருகிறதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்று இந்தத் காட்சிதான் தமிழ்நாட்டில் ஒரு மாதமாக 'ரிப்பீட் மோடில்' (Repeat mode) தினமும் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.

    Advertisement

    அதுமட்டுமல்ல, இன்று தமிழ்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மின்வெட்டுதான். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், இந்த நேரம் வரைக்கும் இந்த மண்டபத்தில் மின்சாரம் தடைபடாமல் இருக்கிறது. ஜெனரேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அதுவும் குறிப்பாக, இந்த ஒரத்தநாடு பகுதியில் பல கிராமங்களில் நள்ளிரவுகளில் மின்வெட்டு (Power cut) ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. அது தொடர்கதையாக வந்துகொண்டிருக்கிறது. விவசாயிகள் இன்று இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    நம்முடைய தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, 2021-ஆம் ஆண்டிலிருந்து 2025-ஆம் ஆண்டு வரை சரியாக ஜூன் 12-ஆம் தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து வைத்தார். ஆனால், இந்த அரசு இந்த மேட்டூர் அணையை ஜூன் 12-ஆம் தேதி இன்னும் திறக்கவில்லை. அதுமட்டுமல்ல, குறுவை சாகுபடிக்கு அவர்கள் அறிவித்த சிறப்புத் தொகுப்பு பத்தாது என்று இன்று விவசாயிகள் அத்தனை பேரும் சாலைகளில் வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதைச் சட்டமன்றத்தில் சொன்னவுடனே முதலமைச்சர் என்ன சொன்னார்? 'திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டத்திற்கு வந்துள்ளார்கள்' என்று விவசாயிகளுடைய போராட்டத்தையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார், இங்கு இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

    Advertisement

    தேர்தலின்போது, '5 ஏக்கர் வரைக்கும் பயிர் கடன் தள்ளுபடி' என்று தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதிகளைக் கொடுத்தார். ஆனால், அதையெல்லாம் செய்தாரா என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். முதலில் 1 லட்சம் வரைக்கும் பயிர் கடன் வாங்கியிருந்தால், வெறும் 5000 ரூபாய் தள்ளுபடி என்று அறிவித்தார்கள். அதிலும் பார்த்தீர்கள் என்றால், சிறு விவசாயி, குறு விவசாயி என்று தரம் பிரித்தார்கள். அதன்பிறகு 75,000 வரைக்கும் தள்ளுபடி என்று சொன்னார்கள். அதிலும் இப்போது ஒரே வீட்டில் இரண்டு பேர், மூன்று பேர் கடன் வாங்கியிருந்தாலோ, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் வாங்குபவர்கள் இருந்தாலோ, அவர்களுக்கெல்லாம் பயிர் கடன் தள்ளுபடி இல்லை என்பதையும் அறிவித்திருக்கிறார்கள்.

    Advertisement

    இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கொடுமை, சட்டமன்ற ஒழுங்கு சீர்குலைவதுதான். இன்று தமிழ்நாட்டின் சட்டமன்ற ஒழுங்கு எந்த அளவில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். ஒரு அதலபாதாளத்தில், படுகுழியில் இன்று இந்த ஆட்சியாளர்கள் தள்ளியிருக்கிறார்கள். இதையெல்லாம் கழகம் சார்பாகச் சட்டமன்றத்தில் நாங்கள் பேசினோம். ஆனால், அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர், பதில் சொன்னாரா?

    ஆளுங்கட்சியினர் சட்டசபையில் என்னென்ன கூத்தடித்தார்கள் என்று நீங்கள் அத்தனை பேரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். எங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம்; இது சட்டமன்றமா, இல்லை சினிமா தியேட்டரா, இல்லை ஏதாவது ஒரு படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிட்டோமா என்று கேட்கிற அளவுக்கு, இன்று சட்டமன்றத்தினுடைய தரத்தையே நம்முடைய ஆளுங்கட்சியினர் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    ஆனால், எதற்கு எடுத்தாலும் 'திமுகதான் காரணம்' என்பதைத் தயார்நிலை பதிலாக இன்றைய ஆட்சியாளர்கள் வைத்துள்ளார்கள். நம்முடைய தலைவர் செய்த பணிகளால் நல்லது நடந்தால், அதற்கும் சேர்த்து இந்த ஆட்சியாளர்கள் இன்று 'ஸ்டிக்கர்' ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதுவே ஏதாவது பிரச்சனை என்றால் 'திமுகதான் காரணம்' என்கிற ரெடிமேட் பதிலையும் கொடுத்துவிடுகிறார்கள்.

    அதுமட்டுமல்ல, நம்முடைய தலைவரைச் சிறுமைப்படுத்துகிறோம் என்கிற நோக்கத்தோடு, 'நம்முடைய தலைவரை முதலமைச்சர் தேடிக்கொண்டிருக்கிறார்' என்றும் சட்டமன்றத்தில் பேசினார். நம் தலைவர் என்னைக்கும் தேடிக் கண்டுபிடிக்கிற இடத்தில் இருந்ததே கிடையாது. மிசா காலத்தில் தலைவரைத் தேடி காவல்துறை கோபாலபுரம் இல்லத்திற்கு அவரைக் கைது செய்வதற்கு வந்தது.

    அப்போது கலைஞர் அவர்கள் சொன்ன பதில், "என்னுடைய மகன் கழக நிகழ்ச்சிக்காக வெளியூர் போயிருக்கிறார், வந்ததும் நானே உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்" என்பதுதான். கலைஞர் சொன்னபடி, கழகப்பணி முடிந்து வந்த நம்முடைய தலைவரை உடனடியாகக் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

    இன்று மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலமாக, நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக, இன்று நம்முடைய தலைவர் தமிழ்நாடு முழுக்க இருக்கிறார்; எங்கும் நிறைந்திருக்கிறார். தினமும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடியவர் நம்முடைய தலைவர் அவர்கள்; மக்களுடைய இதயங்களில் இருக்கக்கூடியவர் நம்முடைய தலைவர் அவர்கள்.

    ஆனால் அதே நேரத்தில், சென்னையில் இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சருடைய தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்கள் என்ன தெரியுமா சொல்கிறார்கள்? "நாங்கள் எல்லாம் தெரியாமல் ஒருத்தரைத் தெரியாத்தனமாக ஜெயிக்க வைத்துவிட்டோமே, அவர் எங்கே போனார்? யாராவது பார்த்தீர்களா?" என்று கேட்கிற அளவுக்கு இன்று பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

    இந்த ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் யாரைத் தேடிக்கொண்டிருக்கிறது? மின்சாரத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது! கடந்த ஐந்து வருடம் நன்றாக இருந்த சட்டமன்ற ஒழுங்கை இன்று மக்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, கிண்டல் பண்ணுவதாக நினைத்து முதலமைச்சர், அவரை அவரே இன்று வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளார். இன்னும் அவர் சட்டமன்றத்தில் நடனம் மட்டும்தான் ஆடவில்லை. அடுத்த கூட்டத்தொடரில் நிச்சயம் ஒரு நடனச் செயல்பாடும் இருக்கும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு.

    ஆகவே, இன்று தமிழ்நாடு இவ்வளவு பெரிய ஒரு பேரிடரில் மாட்டிக்கொண்டிருக்கிறது. இந்த பேரிடரிலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நம்முடைய பொறுப்பு, உடன்பிறப்புகளாகிய நம்முடைய பொறுப்பு. அதற்காக நாம் அனைவரும் வருங்காலத்தில் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும். நாம் பார்க்காத வெற்றியும் கிடையாது, நாம் பார்க்காத தோல்வியும் கிடையாது. கட்சியையும் தலைவரையும் மனத்தில் வைத்து, நம்முடைய பணிகளை எல்லாம் நாம் வகுத்துக்கொள்ள வேண்டும்" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    English Summary

    Udhayanidhi Stalin states that the TVK government has announced there will be no crop loans for government employees teachers and pensioners.