தஞ்சாவூர்: உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து செங்கிப்பட்டி காவல் நிலையம் முன்பு திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் குவிந்து தவெக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு வந்திருந்த பிக் பாஸ் ஜூலியும் தவெக அரசுக்கு எதிராக கொட்டும் மழையிலும் கண்டன கோஷம் எழுப்பினார். "பயமா பயமா.. தவெக அரசே பயமா? கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. தவெக அரசை கண்டிக்கின்றோம்.. தற்குறி அரசை கண்டிக்கின்றோம்.." என ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினார்.
திமுக இளைஞரணி தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், இரட்டை அர்த்தம் தரும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி இன்று காலை கைதானர். சென்னை நீலாங்கரை உள்ள வீட்டில் வைத்து உதயநிதியை கைது செய்த தஞ்சை போலீசார், சாலை மார்க்கமாக வேனில் தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.
சுமார் 7.30 மணி நேர பயணத்திற்கு பிறகு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதி கொண்டு வரப்பட்டார். உதயநிதி ஸ்டாலினிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் காவல் நிலைய முன்பாக திரண்டனர். தவெக அரசுக்கு எதிராகவும் போலீசாரை கண்டித்தும் திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். பிக் பாஸ் ஜூலியும் அங்கே வந்திருந்தார். உதயநிதி கைதை கண்டித்தும் ஜூலியும் ஆவேசமாக கோஷம் எழுப்பினார். 'பயமா பயமா.. தவெக அரசே பயமா? கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. தவெக அரசை கண்டிக்கின்றோம்.. தற்குறி அரசை கண்டிக்கின்றோம்.. பொட்டு மாமா.. தவெக அரசை கண்டிக்கிறோம்.. வாழ்க வாழ்கவே, இளம் தலைவர் வாழ்கவே" என ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினார். அப்போது மழை பெய்தது. எனினும் மழையையும் பொருட்படுத்தமால் கொட்டும் மழையிலும் திமுகவினர் அங்கிருந்து நகராமல் கண்டன கோஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றும் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்படும் வரை அங்கிருந்து நகர மாட்டோம் என சொல்லி அங்கேயே நின்று கோஷங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். சுமார் 1.30 மணி நேர விசாரணைக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். உதயநிதி வெளியில் வந்ததும் அவரை திமுகவினர் மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர். உதயநிதியும் திறந்தவெளி காரில் நின்றபடி தொண்டர்களை நோக்கி கையசைத்தார். நாளை சட்டசபை பட்ஜெட் இருப்பதால் உடனடியாக திருச்சி விமான நிலையம் புறப்பட்டார். பின்னர் அங்கிருந்து இரவே சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். முன்னதாக சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதும், தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு வைத்து விசாரணை நடைபெறும் எனக் கூறப்பட்டது. அதனால், அங்கு ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டு இருந்தனர். ஆனால், திருச்சி வழியாக வந்த போலீஸ் வேன் பூண்டி பிரிவுசாலை வரை வந்துவிட்டு, மீண்டும் செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு சென்றது. அங்கு வேனிலிருந்து உதயநிதி ஸ்டாலின் உடனடியாக இறங்கவில்லை. விசாரணைக்கு தஞ்சைக்கு அழைத்துச் செல்லாமல் இங்கே ஏன் அழைத்து வந்தீர்கள் என போலீசாரிடம் கேள்வி எழுப்பியதுடன், தனது வழக்கறிஞர்கள் வந்தால் மட்டுமே போலீஸ் நிலையத்துக்குள் வருவேன் எனக் கூறி வேனை விட்டு இறங்க மறுத்தார். சுமார் அரைமணி நேரம் வேனில் காத்திருந்த உதயநிதி ஸ்டாலின், திமுக வழக்கறிஞர்கள் தஞ்சாவூரிலிருந்து செங்கிப்பட்டிக்கு வந்த பிறகே, வேனில் இருந்து இறங்கி ஸ்டேஷனுக்குள் சென்றார். செங்கிப்பட்டி காவல் நிலையத்தில், உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார் என்ற தகவல் அறிந்தவுடன் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் போலீஸ் நிலையம் முன்பு கூடினர். அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தியும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீஸ் வேனில் இருந்து கீழே இறங்கிய உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களை நோக்கி நடந்து சென்றவாறு உற்சாகமாக கை அசைத்தார். இதனால் நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உதயநிதி ஸ்டாலின் வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். விசாரணை முடிந்த பிறகும் வழி நெடுக திரண்டு இருந்த தொண்டர்களை பார்த்து உற்சாகத்துடன் ரோடு ஷோவாக சென்றார். திருச்சி விமான நிலையம் வரை கார் மூலம் வந்த உதயநிதி, அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை பல்வேறு இடங்களில் கைது செய்த போலீசார், சிறிது நேரம் கழித்து விடுதலை செய்தனர்.பிக் பாஸ் ஜூலி கோஷம்
கொட்டும் மழையிலும் கோஷம்
செங்கிப்பட்டிக்கு திருப்பிய போலீசார்
கை அசைத்த உதயநிதி