தமிழ்நாட்டில் ஜூலை 31 முதல் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. 60,000 கடைகள் மொத்தமாக மூடல்

  • தஞ்சாவூர்: தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தப்படும் என்றும் 60,000 கடைகளில் கறிக்கோழி விற்கப்படாது என்றும் கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. உற்பத்தியாளர்கள் கோழிகளை அனுப்பும் போது, கழுத்து வரை தீவனம் கொடுத்து அனுப்புவதாகவும், இதனால் சுத்தமான கோழிகளை விற்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தை அறிவித்துள்ளது. தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு கோழிவணிகர் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு கோழி வணிகர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களை துன்புறுத்தாமல், எங்களின் மனநிலையை புரிந்து கொண்டு, எங்களுக்கு முழுவதுமாக தீவினக்கட்டுப்பாடு செய்து, கோழிகளை கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள்.. ஆனால் இதற்கான பதில் இல்லாததால், ஊடகங்கள் வழியாக நாங்கள் என்ன அறிவிக்கிறோம் என்றால், வருகிற 31.07.2026 வெள்ளிக்கிழமை முதல் விற்பனையை நிறுத்தி தொடர் போராட்டம் மேற்கொள்ள இருக்கிறோம். இந்த போராட்டத்திற்கு புதுச்சேரி மாநில கோழி வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    கேரளாவின் வணிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். புதன்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் இங்கே (தஞ்சையில்) மீட்டிங்க் இருக்கிறது. அதில் கேரள வணிகர்களும் வருகிறார்கள். அவர்களுக்கும் இதேபோன்ற சிரமங்கள் இருக்கிறது. பிரச்சனைகளால் கஷ்டப்படுகிறார்கள். இந்த கோரிக்கையை அவர்களும் ஏற்றுக்கொண்டு எங்களுக்கு ஆதரவாக போராட தயாராக இருக்கிறார்கள். ஊடகங்கள் வழியாக இன்னொரு முக்கியமான விஷயம் கூறுகிறோம்.. இந்த போராட்டத்தால் உணவகங்கள் பாதிக்கப்படலாம். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை..

    சாதாரண மக்களை விட உணவகங்கள் வாங்குவது சமமாக இருக்கிறது. போராடும் சூழல் இருப்பதால், நீங்கள் சேமிப்பது, வாங்கி வைப்பது என்றால் வைத்துக்கொள்ளுங்கள். பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.. எங்களுக்கு வேறு வழியில்லை.. இந்த போராட்டத்தின் காரணமாக, கோழி உற்பத்தி நிறுவனங்கள், கோழியை தெளிவாக கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.இதன் மூலம் சிறப்பான பாதுகாப்பான கோழி இறைச்சி மக்களுக்கு கிடைக்கும்" இவ்வாறு கோழி வணிகர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்கள்.

    Advertisement

    கோழி வணிகர்கள் கூறுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.. ஏனெனில் கோழி உற்பத்தியாளர்கள் அதனை தினமும் விற்பனைக்கு அனுப்பும் போது, எடையைக் கூட்டுவதற்காக கழுத்து வரை தீவனம் மற்றும் தண்ணீரைக் கட்டாயப்படுத்தி ஊட்டி அனுப்புவது போன்ற தவறான நடைமுறைகளை பின்பற்றுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

    அப்படி தீவனங்களை வழங்கினால், கோழியின் இறைப்பையில் 100 கிராம் முதல் 200 கிராம் வரை தீவனமும் தண்ணீரும் தங்கிவிடும். கோழி வாங்கும் போது, சுமார் 150 கிராம் வரை செரிக்காத தீவனமாக இருக்கும். இதனால் வாடிக்கையாளருக்கு பண நஷ்டம் ஏற்படும் என்பது வணிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அதேபோல் கோழியை வெட்டி சுத்தம் செய்யும் போது, இறைப்பையில் உள்ள செரிக்காத தீவனமும் அதோடு சேர்ந்த கழிவுகளும் கறியில் சிந்தி இறைச்சியைப் பாழாக்கிவிடுவதாக வணிகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதன் காரணமாக சுத்தமான இறைச்சியை வழங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் வணிகர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

    Advertisement

    கழுத்துவரை தீவனம் தருவதால் கோழி மூச்சுவிட சிரமப்படும். இதனால் வண்டிகளில் ஏற்றிச் செல்லும்போது வெப்பம், மூச்சுத்திணறலால் கோழிகள் வழியிலேயே செத்துப்போகும்நிலையும் அடிக்கடி ஏற்படுகிறது. அதேபோல் வண்டியில் வரும்போது கோழியின் வயிற்றில் உள்ள உணவினால் பாக்டீரியாக்கள் வேகமாக அதிகமாகவிடும். அத்துடன் கோழி வெட்டப்படுவதற்கு முன்பே அதன் இறைச்சி கெட்டுப்போக அல்லது துர்நாற்றம் வீச வாய்ப்பு மிக அதிகம்.

    English Summary

    The Poultry Traders' Federation has announced that the sale of broiler chickens will be halted across Tamil Nadu starting July 31, meaning sales will cease at 60,000 outlets. They have alleged that producers supply chickens with crops stuffed with feed right up to the neck, making it impossible to sell clean, quality birds.