“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி


  • தஞ்சாவூர்: "எடப்பாடி பழனிசாமி வந்து எனது உடலுக்கு மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்" எனத் தெரிவித்துவிட்டு உயிர்நீத்த அதிமுக தொண்டர் பூக்கடை மகேந்திரன் உடலுக்கு நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி. அவரிடம் அவரது குடும்பத்தினர் கதறிய காட்சி, அங்கிருந்த கட்சியினரை கலங்க வைத்துள்ளது.

    அதிமுகவின் தோல்வி, கட்சியில் ஏற்பட்ட பிளவு என தொடர்ச்சியாக அதிமுகவில் நிலவும் பிரச்சனைகள் அக்கட்சித் தொண்டர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த திருப்பனந்தாளை சேர்ந்த அதிமுக நிர்வாகி மகேந்திரன் என்பவர் தனது முடிவை வீடியோ வாயிலாக பதிவிட்டு விட்டு நேற்று இரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவில் வசித்தவர் மகேந்திரன். இவர் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணியின் இணை செயலாளராக இருந்து வந்தார். தீவிர அதிமுக விசுவாசியான இவர், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது, அதனைத்தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை பூக்கடை மகேந்திரன் ஒரு வீடியோவில், "அதிமுக ஒன்றிணைய வேண்டும், அதிமுக தோற்றுப் போனது வேதனை அளிக்கிறது, அடுத்த பிறவியிலும் அதிமுகவின் எளிய தொண்டனாக பிறக்க வேண்டும், மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைக்க வேண்டும்.

    என்னுடைய இறப்புக்குப் பிறகாவது கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒன்று சேர்ந்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும். இறுதி ஆசையாக எனது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தால் எனது ஆத்மா சாந்தி அடையும்" என வீடியோவில் பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டு விட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இந்தச் சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று எடப்பாடி பழனிசாமி திருப்பனந்தாள் வருகை தந்து, மகேந்திரன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

    உயிரிழந்த மகேந்திரனின் குழந்தைகளுக்கான முழுக் கல்விச் செலவையும் அதிமுக ஏற்றுக்கொள்ளும் எனவும், மேலும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளுக்கும் அஇஅதிமுக துணைநிற்கும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    மேலும், உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரனின் குடும்பத்திற்கு தலைமைக் கழகம் சார்பில் ரூ.30 லட்சமும் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ.25 லட்சமும் என ரூபாய் 55 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Edappadi Palaniswami personally visited the mortal remains of Pookkadai Mahendran—an AIADMK cadre who had passed away after declaring, “My soul will find peace only if Edappadi Palaniswami places a garland upon my body”—and paid his tributes by garlanding the deceased. The scene of the family members wailing inconsolably before him moved the party members present at the spot to tears.