வெயிலில் கஷ்டப்படும் விவசாயிகள்.. முதல்வர் விஜய்க்கு நவீன அறையா?.. எடப்பாடி பழனிசாமி கேள்வி

  • சென்னை: கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் தவெக அரசு மெத்தனமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    ஆர்ப்பாட்டத்தில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். இந்த தவெக அரசு அதை செய்யவில்லை. ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரீல்ஸ் மட்டுமே போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். விவசாயிகள் பற்றி இந்த அரசுக்கு கவலையில்லை. ஜூன் மாதத்தில் கர்நாடக அரசைத் தொடர்பு கொண்டு நமக்குத் தேவையான தண்ணீரைப் பற்றி பேசவில்லை.

    Advertisement

    இதனால், குறுவை சாகுபடி இந்த ஆண்டு முழுமையாக செய்ய முடியவில்லை. டெல்டா மாவட்டத்தில் மட்டும் ஐந்தரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு நிலத்தடி நீரை நம்பி இரண்டு லட்சம் ஏக்கர் மட்டுமே பாசனம் பெறுகிறது. இந்த நிலத்திற்கு முழுமையாக மும்முமுனை மின்சாரத்தை தவெக அரசு கொடுப்பதில்லை. இதனால், ஒரு லட்சம் ஏக்கர் நிலம் தண்ணீரின்றி காய்ந்து கருகி போய்விட்டது. எனவே, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால், அதனை தவெக அரசு கண்டுகொள்ளவில்லை.

    Advertisement

    தவெக அரசுக்கு விவசாயிகள் பற்றி, அவர்கள் வேதனைப்படுவதைப் பற்றி கவலை இல்லை. இனியாவது இந்த அரசாங்கம் குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு அதனை தவெக அரசு நிறைவேற்றவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்.

    இந்த அரசாங்கம் விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. வறட்சி நிலவிக் கொண்டிருக்கிறது, இதனால் விவசாயிகள் வேளாண் மேற்கொள்ள முடியவில்லை. இதனால், வாங்கி கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறார். எனவே, சிறு, குறு உள்ளிட்ட அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    Advertisement

    அரசு விழிப்போடு செயல்பட்டு, சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை கர்நாடகாவிடன் பெற்றுத்தர வேண்டும். காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு அழுத்த தர வேண்டும். மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு உடனடியாக கூட்ட வேண்டும். விவசாயிகள் வெய்யிலில் காய்ந்து கொண்டு இருக்கும்போது முதல்வர் ஜோசப் விஜய் தனது அறையை மாற்றுகிறார்.

    அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நான், ஸ்டாலின் என அனைத்து முதல்வர்களும் அந்த அறையில்தான் இருந்து பணியாற்றினோம். இத்தனை முதல்வர்களும் அந்த அறையில் இருந்து தான் பல்வேறு திட்டங்களை தீட்டி மக்களுக்கு வழங்கினோம். இப்போது முதல்வருக்கு அறை தான் முக்கியம். விவசாயிகள் முக்கியம் இல்லை. விவசாயிகள் சோற்றுக்கு திண்டாடிக் கொண்டிருக்கும்போது, முதல்வருக்கு அறையில் வசதி பத்தவில்லை. நவீன அறைதான் முக்கியம். நடிகர் அப்படிதான் இருப்பார். தலைவிதி, தலையெழுத்து என்ன செய்வது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழுங்கல் ஆனால் விவசாயிகளை தண்டிக்காதீர்கள். விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்.

    English Summary

    Edappadi Palanisamy accused the TVK government of neglecting farmers and criticized CM Vijay’s decision to renovate his office while Delta farmers struggle for water and relief.