தஞ்சையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது.. சிக்க வைத்த காண்டிராக்டர்

  • தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திருப்பணி தொடர்பான அனுமதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் பெண் இணை ஆணையரையும், அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட தோழியையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

    Advertisement

    தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே தீபாம்பாள்புரம் என்ற கிராம் இருக்கிறது. இந்த கிராமத்தில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒப்பந்ததாரரான மதியழகன் என்பவர் மேற்கொண்டு வருகிறார்.

    Advertisement

    வன்மீகநாதர் கோவில் திருப்பணி தொடர்பான அனுமதி மற்றும் நிர்வாக நடவடிக்கைளுக்கு மதியழகன் தஞ்சை மண்டல இந்துசமய அறநிலைத்துறை இணை ஆணையரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும். எனவே தஞ்சையில் உள்ள மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமியிடம் திருப்பணி தொடர்பான அனுமதி கேட்டுள்ளாராம். ஆனால் இணை ஆணையர் ஜோதிலட்சுமி ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மதியழகன், இது குறித்து தஞ்சையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதை யடுத்து ஜோதிலட்சுமியை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தார்கள். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரின் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு மதியழகன், நேற்று மாலை தஞ்சையில் உள்ள மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார்.

    Advertisement

    அப்போது ஜோதிலட்சுமியிடம் கொடுப்பதற்காக மதியழகன் பணத்தை எடுத்த போது அதை அங்கு இருந்த இடைத்தரகராக செயல்பட்ட தோழி கிரிஜா பெற்றுக்கொண்டார். இதையடுத்து அங்கு மறைந்திருந்த தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து இணை ஆணையர் ஜோதிலட்சுமி(வயது 47), இடைத்தரகர் கிரிஜா(51) ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள்.

    கைது செய்யப்பட்ட ஜோதிலட்சுமியின் வீடு தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினா நகர் பகுதியில் உள்ளது. அந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Anti-Corruption police arrested Thanjavur HR&CE Joint Commissioner Jothilakshmi and a female friend—who acted as an intermediary—red-handed. They were arrested following a complaint that they had accepted a bribe of ₹1 lakh from a contractor in connection with administrative procedures and approvals for renovation work at the Vanmeeganathar Temple near Ammapettai in Thanjavur district.