வைத்திலிங்கத்துக்கு ‘அதிர்ச்சி’ வைத்தியம் கொடுத்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் காலமானார்!

  • சென்னை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ எம்.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2016ல் திமுக சார்பில் போட்டியிட்டு வைத்திலிங்கத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் மறைவு திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    2016 சட்டசபை தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை 3,642 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் எம். ராமச்சந்திரன்.

    Advertisement

    2001, 2006, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ஹாட்ரிக் அடித்தவர் வைத்திலிங்கம். தனக்கென்று தனி செல்வாக்கை ஒரத்தநாட்டில் உருவாக்கி வைத்திருந்தார். அதிமுகவில் டெல்டா மண்டல தளபதியாக விளங்கினார். ஆனால், 2016ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுகவின் ராமச்சந்திரனிடம் தோல்வி அடைந்தார் வைத்ஹிலிங்கம்.

    அதிமுகவில் பலமான புள்ளியாக இருந்த வைத்திலிங்கத்தின் தோல்வி ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. டெல்டா தளபதி வைத்திலிங்கத்துக்கு 'அதிர்ச்சி வைத்தியம்' கொடுத்த ராமச்சந்திர்ன் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.

    ராமச்சந்திரன் ஒரத்தநாடு தொகுதியில் 2016ல் வெற்றி பெற்றிருந்தாலும், அதற்கு முன்பே 2 முறை திமுக சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர். 1989 மற்றும் 1996 சட்டமன்றத் தேர்தல்களில் திருவோணம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார் எம்.ராமச்சந்திரன்.

    Advertisement

    ராமச்சந்திரன், ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூரைச் சேர்ந்தவர். 3 முறை எம்.எல்.ஏவாக இருந்தாலும் எளிமையான நபர். தனது ஊர் பகுதியில் இருக்கும் கட்சியினரின் சுக துக்க நிகழ்வுகளுக்கு பைக்கிலேயே சென்று வருவார். டெல்டா மண்டலத்தில் திமுகவின் வளர்ச்சிக்காக இவர் செய்த கட்சிப் பணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

    எம். ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு அப்பகுதி மக்களிடையேயும், திமுகவினர் இடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிமையான அரசியல்வாதியான இவரது இழப்பு கட்சிக்கு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக தஞ்சை மண்டல திமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    ராமச்சந்திரனின் மறைவுச் செய்தி அறிந்ததும், திமுக தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    English Summary

    Former DMK MLA M Ramachandran has passed away due to ill health. His demise has saddened members of the DMK; he had previously won the Orathanadu assembly constituency as a DMK candidate in the 2016 elections.