மூக்கில் வளரும் சதையை அகற்ற அட்மிட்டான 14 வயது சிறுவன்! கோமாவில் 2 மாதம் போராடி பலி! தேனியில் சோகம்

  • தேனி: தேனி அரசு மருத்துவமனையில் 60 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சிறுவனின் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

    Advertisement

    தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார். இவருக்கு கடுமையான சளி மற்றும் உடல்நல குறைவு காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    Advertisement

    அப்போது சிறுவனுக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளதாகவும் அதனை அகற்றுவதற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்காக சிறுவனுக்கு சுவாச குழாய் வழியாக செலுத்தப்பட வேண்டிய டியூப்பை
    தவறுதலாக உணவு குழாய் வழியாக செலுத்தி தவறான சிகிச்சை மேற்கொண்டதால் சிறுவனின் நிலைமை மேலும் மோசம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர் கோமாவுக்கு சென்றதாக தெரிகிறது.

    இதனை அடுத்து சிறுவனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    Advertisement

    சிறுவனின் உடலைக் கண்டு அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து உயிரிழந்த சிறுவனின் உடலை உடற்கூராய்வு செய்தபின் அவர் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது

    இந்த நிலையில் ஒருவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக சிறுவனின் பெற்றோருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்

    சிறுவனின் உடற்கூராய்வு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும், சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்திருப்பதாக புகார் வருகின்ற நிலையில் அது குறித்து அரசு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    Advertisement

    உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கி, வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.