தேனி: தீபாவளி பண்டிகையை கொடைக்கானலில் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் கடந்த 3 நாட்களாகவே குவிந்து வருகின்றனர். அப்படி சுற்றுலா வருபவர்களில் பலரும் மாணவ, மாணவிகள் ஆவர். மாணவ மாணவிகள் வந்த ஒரு சுற்றுலா பேருந்து , கொடைக்கானலில் இருந்து கிளம்பி, கேரளாவிற்கு சென்றது.பேருந்து தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே வந்த போது, திடீரென தீப்பிடித்து எரிந்தது. நல்ல்வேளையாக மாணவ மாணவிகள் உள்பட 40 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவ -- மாணவியர் 36 பேர், ஆசிரியர்கள் 4 பேர் என, மொத்தம் 40 பேர் சுற்றுலா பஸ் மூலம் கொடைக்கானலுக்கு வந்தனர். பஸ்சை திருச்சூர் வடசேரி பாறைஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 41 வயதாகும் செவிக், என்பவர் ஓட்டினார். கொடைக்கானலில் நேற்று பயணத்தை பயணத்தை முடித்துகொண்டு மூணாறு செல்வதற்காக மீண்டும் கேரளா நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே புல்லக்காப்பட்டி என்ற இடத்தின் அருகே பேருந்து சென்றபோது திடீரென டயர் வெடித்து புகை வரத்தொடங்கியது, இதையடுத்து, பேருந்தில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ மளமளெவென பரவியதால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து பெரியகுளம், வத்தலகுண்டு, தேனி உள்ளிட்ட பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதும் அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பேருந்து முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதில் மாணவர்களின் உடைகளும் தீயில் கருகின. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. ஓட்டுநர் சரியான நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால், மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட தகவலில் பேருந்தின் டயர் வெடித்ததில் சிராய்வு ஏற்பட்டு பேருந்தின் குளிர்சாதன சிலிண்டர் மூலமாக தீ பரவியது தெரியவந்தது. இதனையடுத்து, மாற்று பேருந்து மூலம் பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டார்கள். இந்த சம்பவத்தால் தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனப் போக்குவரத்து தடைபட்டது.
இதனால் பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர். உடனே சுதாரித்த ஓட்டுநர், பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, மாணவர்களை பாதுகாப்பாக கீழே இறக்கினார். சிறிது நேரத்தில் பேருந்தில் தீ பிடித்து எரிய தொடங்கியது.