தேனி: தேனி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் இகேஒய்சி (e-KYC) கைரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இதுவரை கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையுடன் அருகே உள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஜூலை 31க்குள் கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தேனி மாவட்ட மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் தகுதியான குடும்பங்களுக்கு இலவச அரிசி, மானிய விலையில் சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் வழக்கமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான சர்க்கரை அட்டைதாரர்கள் நேரடியாகவே பலன் பெற்று வருகிறார்கள்.
ஆனால் இனிமேல் இந்த பொருட்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால், குடும்ப அட்டையிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தங்களின் இ-கேஒய்சி (e-KYC) கைரேகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தகுதியான மக்களுக்கு மட்டுமே அரசுப் பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், போலியான ரேஷன் கார்டுகளைக் கண்டறிந்து ஒழிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும் வட்ட வழங்கல் துறையும் ஒரு அவசர மற்றும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. தேனி மாவட்டம் மட்டுமின்றி திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர் எனத் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் இந்த உத்தரவு அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 31ம் தேதிக்குள் இந்த கைரேகை பதிவை முடிக்க வேண்டும் என்றும், இதில் தவறினால் ஆகஸ்ட் மாதம் முதல் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் எதுவும் வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதற்காக பொதுமக்கள் அனைவரும் உடனடியாகத் தங்களின் ரேஷன் கடைக்குச் சென்று, குடும்பத்தில் யார் யாருக்கு கேஒய்சி நிலுவையில் உள்ளது என்பதை முதலில் கேட்டறிந்து கொள்ள வேண்டும். நிலுவையில் இருந்தால், கார்டில் பெயர் உள்ள அனைத்து உறுப்பினர்களும் நேரில் சென்று கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை வேலை நிமித்தமாக வேறு ஊர்களில் வசிப்பவர்கள் என்றால், அவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு ரேஷன் கடைக்கும் சென்று இந்த பதிவை செய்து கொள்ளலாம் என்பது மிகப்பெரிய வசதியாகும். அதேபோல, குடும்பத்தில் உயிரிழந்த உறுப்பினர்கள் யாராவது இருந்தால், அவர்களின் பெயர்களை நீக்குவதும் அவசியமாகும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலகத்திலோ அல்லது ரேஷன் கடை விற்பனையாளரிடமோ சென்று உயிரிழந்தவரின் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை நகல்களை வழங்கி நீக்கம் செய்து கொள்ளலாம். அல்லது TNPDS இணையதளத்தின் வழியாகவும் இதற்காகச் சுலபமாக விண்ணப்பிக்கலாம். இந்த கைரேகை பதிவை செய்யாமல் அலட்சியமாக இருந்தால், பொருட்களின் விநியோகம் நிறுத்தப்படுவதோடு பின்னாளில் ரேஷன் கார்டே ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது. எனவே, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று கைரேகையைப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.ரேஷன் அட்டைதாரர்கள்
தேனி மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு
31ம் தேதிக்கள் பதிவு செய்ய உத்தரவு