அமரர் ஊர்தி வராததால் மூதாட்டியின் உடலை தள்ளு வண்டியில் எடுத்துச் சென்ற அவலம்.. தேனி அருகே சோகம்!

  • தேனி: இலவச அமரர் ஊர்தி கிடைக்காததால், வறுமையில் வாழ்ந்து மடிந்த மூதாட்டியின் உடலை தள்ளுவண்டியில் வைத்து 2 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்ற அவல நிலையில் தேனி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

    Advertisement

    தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த சீதாலட்சுமி என்ற மூதாட்டி இன்று காலமானார். வறுமையான சூழ்நிலை மற்றும் உரிய வாரிசுகள் உதவிக்கு ஆளில்லாத நிலையால், அவரது இறுதிச் சடங்கை நடத்துவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

    Advertisement

    ​இறந்த மூதாட்டியின் உடலைத் தேனி நகராட்சி மின்மயானத்திற்குக் கொண்டு செல்ல இலவச அமரர் ஊர்திக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், உரிய நேரத்திற்கு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    முறையான நேரத்தில் வாகனம் வராததாலும், போதிய உதவிக்கு ஆட்கள் இல்லாததாலும் அப்பகுதி சமூக ஆர்வலர் குரு ஐயப்பன் மற்றும் பொதுமக்கள் இணைந்து, மூதாட்டியின் உடலைச் சரக்குத் தள்ளுவண்டியில் வைத்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தள்ளிக்கொண்டு தேனி நகராட்சி மின்மயானத்திற்குத் சென்றனர்.

    ​ஏற்கனவே வறுமையில் வாடிய ஒரு மூதாட்டியின் மறைவிற்குப் பிறகு, இறுதி ஊர்வலத்திற்குக் கூட அரசு தரப்பிலிருந்து இலவச அமரர் ஊர்தி உடனடியாகக் கிடைக்காததும், தேனி நகராட்சி மின்மயானத்தில் போதிய ஊழியர்களும் ஆட்களும் இல்லாததும் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ​மனிதநேயமற்ற இந்தச் செயலால், ஏழை எளிய மக்களின் இறுதிச் சடங்குகள் கூட அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் நரக வேதனையாக மாறுவது தேனி நகராட்சிப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு மின்மயான வசதிகளையும், அமரர் ஊர்தி சேவையையும் சீரமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    English Summary

    In Theni district, a distressing incident has come to light: following the unavailability of a free hearse, the body of an elderly woman—who had lived and passed away in poverty—had to be transported for two kilometers on a pushcart.