தேனி: தேனி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் தற்போது அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றன. பல தலைமுறைகளாக தாங்கள் வசித்து வந்த நிலத்திலிருந்து தாங்கள் எப்போது வெளியேற்றப்பட போகிறோம் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மலைக் காடுகளை சீரமைத்து மண்ணாகி வீடாக்கி வாழ்ந்து வந்த பூர்வ குடிகளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் வனத்துறை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.. என்ன நடக்கிறது? என நேரடியாக கள ஆய்வு நடத்தியது ஒன் இந்தியா தமிழ்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வண்டியூர், நரியூத்து, வருசநாடு, கோதையூர், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். அதாவது பாண்டிய மன்னர் காலத்தில் இருந்தே அங்கு பல கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அப்போதிருந்து அங்கிள் மக்கள் வசித்து இருக்கின்றனர் என்பது உறுதியாகிறது. அது மட்டும் அல்லாமல் கண்டமனூர் ஜமீன் காலத்தில் ஏராளமான மக்கள் அங்கு கீழ் மலைப்பகுதிகளில் இருந்து மேல் மலைப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு காடுகளை சுத்தப்படுத்தி அவற்றை விவசாய நிலங்களாக மாற்றி வசித்து வருகின்றனர். இலவம்பஞ்சு, முந்திரி உள்ளிட்ட விவசாய பயிர்களை சாகுபடி செய்வதோடு மாடு மேய்ப்பதும், கோழி வளர்ப்பதும் இவர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 5து புலிகள் காப்பகமான இதை உருவாக்குவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1,01,657.13 ஹெக்டேர் நிலம் இணைக்கப்பட்டது. இந்த காப்பகம் மதுரை விருதுநகர், தேனி மாவட்டங்களில் பறந்து விரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூர், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை சின்னமனூர் உள்ளிட்ட வனச்சரகங்களுக்கு உட்பட்டு சுமார் 50000 ஹெட்டர் மலைப்பகுதியும் இந்த காப்பகத்துக்குள் வருகிறது. இந்த பகுதியில் சுமார் 5000 ஹெக்டர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறை அனுமதியின்றி சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாண்பமை உச்ச நீதிமன்றம், 2026 மே மாதம் 29ஆம் தேதி முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பித்தது. தேனி மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையின் படி இந்த பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் 4601 ஆக்கிரமிப்பாளர்கள் மொத்தம் 5072.653 ஹெக்டர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேகமலை என்றாலே பலருக்கும் தேயிலைத் தோட்டங்களும், மலைப்பகுதிகளும், சுற்றுலா தளங்களும் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் அதை தவிர்த்து ஏறக்குறைய 4,700 ஹெக்டர் பரப்பு காய்ந்த பூமி என்பது குறிப்பிடத்தக்கது. பாறை மண்மேடுகள் நிறைந்த நிலத்தை சுத்தப்படுத்தி தற்போது அதனை தென்னந் தோப்புகளாகவும், இலவம்பஞ்சு மரங்கள் நிறைந்த பகுதிகளாகவும் மாற்றி வைத்திருக்கின்றனர். ஆனால் வெறும் சுற்றுலாத்தலம் எனக் கூறி அதனை அங்கு பல தலைமுறைகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். கடந்த 2025 மார்ச் மாதத்தில் தான் புலிகள் காப்பகம் வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங்களை பாதுகாக்க அகஸ்தியமலை நிலப்பரப்பு முழுவதும் விரிவான ஆய்வு நடத்த மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு 2025 ஜூலை மற்றும் 2026 ஜனவரி மாதங்களில் இரண்டு அறிக்கையை தாக்கல் செய்தது. அகஸ்தியமழை உயிர்க்கோள காப்பகமானது தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களையும், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பந்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், பெரியார் புலிகள் காப்பகம் உள்ளிட்ட முக்கிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் இந்த நிலப்பரப்பில் தான் அடங்கியுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பாக பகுதியில் 4,600 ஆக்கிரமிப்பாளர்களால், 5072 ஹெக்டர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவும் தெரிவித்தது. மேலும் வனப்பகுதி சார்ந்த மலைச் சரிவுளில் இலவம்பஞ்சு ஏலக்காய், எலுமிச்சை, முந்திரி, அவரை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் 1955 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மலைப்பகுதி சட்டம் மீறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியது. ஆக்கிரமிப்பாளர்களில் பட்டியலில் 118 அரசு ஊழியர்கள் இடம்பெற்று இருக்கின்றனர். ராணுவம், காவல்துறை, சிஆர்பிஎப், வனத்துறை, வருவாய்த்துறை, மின்சார வாரியம், அங்கன்வாடி, பள்ளி கல்வித்துறை, ஊராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற ஊழியர்கள் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலில் இருக்கிறார்களாம். 2022 ஆம் ஆண்டிலேயே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு இருந்தாலும், அதை செயல்படுத்துவதில் மந்த நிலை நிலவுவதாகவும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த குழு குற்றம் சாட்டியது. இது ஒரு புறம் இருக்க ஆக்கிரமிப்பு பகுதிகளை அடையாளம் காண ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் பிரமாண பத்திரத்தில் கூறியிருந்தது. அதே நேரத்தில் இந்த ஆய்வுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்றும், அதன் பின்னர் கள எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை வரையறை மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் விரிவான வெளியேற்றத் திட்டம் இறுதிச் செய்யப்படும் எனக் கூறியுள்ளது. அது மட்டும் அல்லாமல் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள வசதிகள் அரசு தரப்பில் வழங்கப்பட்ட வசதிகள் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு வருவதாகவும் அரசு கூறியுள்ளது. பள்ளிகள், அங்கன்வாடிகள், பொது விநியோகத் திட்ட வசதிகள் உள்டவை விரிவாக்கப்படவில்லை எனவும், புதிய கட்டிடங்களுக்கும் புனரமைப்பு பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மக்கள் வெளியேற்றம் மற்றும் மறுவாழ்வுக்காக தமிழக அரசு ஒரு மறுகுடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு செயல் திட்டத்தை வகுத்துள்ளதாக கூறியுள்ளது. அவர்களுக்கு என தனித்தனியாக சில செயல் திட்டங்களும் வகுக்கப்பட்டு இருக்கிறது. 1595 பேர் நிரந்தரமாக வீடு மட்டும் காட்டின் மூலம் வாழ்வாதாரத்தை பெற்று வரும் நிலையில், தற்காலிக வீடு மற்றும் காட்டின்ன் மூலம் 233 பேர் வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர். இவர்கள் சுமார் 2200 ஹெக்டேர் பரப்பில் வசிக்கின்றனர். காட்டில் விவசாய மட்டும் செய்வோரின் எண்ணிக்கை 2073 ஆகவும் 2867 ஏக்கரை இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் முதல் பிரிவில் உள்ளவர்களை வனப்பகுதிக்கு வெளியே இடமாற்றம் செய்து அரசு வழங்கும் குடியிருப்புகளில் குடியமர்த்தப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதற்கிடையே அப்பகுதி வனப்பகுதியே இல்லை எனவும, 1978ல் தான் அந்த பகுதி வனப் பகுதியாக அறிவிக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் அகஸ்திய மலை நிலப்பரப்பு, புலிகள் யானைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் பகுதி எனக் கூறியிருக்கும் நிலையில் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அதுபோன்ற எந்தவித விலங்குகளும் இல்லை எனவும், தாங்கள் புலி யானை உள்ளிட்ட விலங்குகளை பார்த்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது என்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வனப்பகுதியில் தாங்கள் குடியிருப்பது உண்மை என அரசு நம்புமானால், தங்களுக்கு ஏன் மின்சாரம், சாலை, குடிநீர், அங்கன்வாடி, பள்ளி உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தது என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கிடையே காடுகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது அவர்களை வெளியேற்றுவது ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும். மனிதாபிமான காரணங்களை கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை காலவரையின்றி தாமதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், வனப்பகுதிகளில் மக்கள் வெளியேற வெளியேற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் துணை ராணுவ படையை ஈடுபடுத்தலாம் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவால் தான் மலைக்கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இங்கு சிலர் தங்கள் வீடுகள் மற்றும் நிலங்களுக்கு பட்டா வைத்துள்ளனர். சிலரிடம் பட்டா இல்லை. அருகருகே இருக்கும் நிலங்களில் கூட பட்டா நிலவரம் வேறுபடுகிறது. இன்று பட்டா இல்லாதவர்களை வெளியேற்றினால், நாளை பட்டா இருப்பவர்களையும் வெளியேற்றுவார்களோ என்ற அச்சம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு படிப்பறிவின்மை மற்றும் பொருளாதார சூழல் காரணமாக பட்டாவின் முக்கியத்துவம் மக்களுக்கு தெரியவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். அரசே எங்களுக்கு ரேஷன் கடை, சாலை, மின்சாரம், பேருந்து வசதி, பள்ளிக்கூடம், அங்கன்வாடி மையம் என பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இப்போது எப்படி எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்த முடியும் என்றும், ஐந்து தலைமுறைகளாக குடும்பம் வசித்து வருகிறோம். பிறந்தது இங்கேதான் நிலம், வீடு என எங்களுடைய வாழ்வாதாரங்கள் அனைத்தும் இங்குதான் உள்ளன. இந்த வயதில் வேறு இடத்துக்கு சென்று மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிப்பது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்புகின்றனர் மக்கள். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய வழக்கறிஞர் கணேசன்," பல தலைமுறைகளாக வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் உரிமைகள் குறித்து வன உரிமைகள் சட்டம் 2006 பல முக்கிய உரிமைகளை வழங்குகிரது. இந்தச் சட்டத்தின்படி, 13 டிசம்பர் 2005க்கு முன்பாக வனப்பகுதிகளில் வசித்த பழங்குடியினர் மற்றும் குறைந்தது மூன்று தலைமுறைகளாக, அதாவது 75 ஆண்டுகளாக, வனத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வசிக்கும் பிற பாரம்பரிய வனவாழ் மக்களுக்கு சில உரிமைகள் வழங்கப்படுகின்றன. நில உரிமை கேட்கும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிமைகள் அங்கீகரிக்கும் நடைமுறை முழுமையாக முடிவடையும் வரை வனப்பகுதியில் வசிக்கும் நபர்களை அவர் வசிக்கும் நிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என சட்டத்தின் பிரிவு 4 குறிப்பிடுகிறது. மேலும், வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளான பள்ளி, மருத்துவமனை, அங்கன்வாடி, குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளுக்காக குறிப்பிட்ட வரம்புகளுக்குள் வன நிலத்தை பயன்படுத்தவும் சட்டம் அனுமதிக்கிறது என்கிறார். பல தலைமுறைகளாக இங்கு வசித்து வரும் மக்களுக்கு வன உரிமைகள் சட்டத்தின் கீழ் இங்கேயே நிலப்பட்டா வழங்க வேண்டும். கிராம மக்கள் சிலருடன் இணைந்து ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் விஜயை சந்தித்து மனு அளித்ததாகவும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கையையும் அப்பகுதி மக்கள் வைக்கின்றனர். தாங்கள் "ஆக்கிரமிப்பாளர்கள்" அல்ல.. தலைமுறை தலைமுறையாக இந்த நிலத்தில் வாழ்ந்து வரும் பூர்வகுடிகள் என ஆதங்கத்துடன் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தான் அப்பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது...