முல்லைப் பெரியாறில் ட்ரோன் ரீல்ஸ்.. கேரள வனத்துறை கடும் எதிர்ப்பு.. வீடியாவை நீக்கிய தவெக எம்எல்ஏ

  • தேனி: குமுளி தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட பெரியகுளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன் ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்து அந்த காட்சிகளை சமூக வலைதளப்பக்கத்தில் ரீல்ஸ் ஆக பதிவிட்டார். இதற்கு கேரள வனத்துறை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், தமிழக அதிகாரிகளை கண்டித்தது. விஷயம் சர்ச்சையான நிலையில், பெரியகுளம் எம்.எல்.ஏ. சபரி ஐயங்கரன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

    Advertisement

    முல்லைப்பெரியாறு அணை தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள குமுளியின் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணை பகுதியில் கேரள மாநிலத்துக்கு உபரிநீர் வெளியேற்றும் 13 மதகுகள் இருக்கின்றன. அதேபோல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் மதகு தேக்கடி பகுதியில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேக்கடியில் உள்ள மதகுக்கு சென்று தமிழக அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாகும்.

    Advertisement

    அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வைத்திநாதன், தண்ணீர் திறந்து வைத்த இந்த நிகழ்ச்சியில், தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்), மகாராஜன் (ஆண்டிப்பட்டி), சபரி ஐங்கரன் (பெரியகுளம்) ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் தான் பங்கேற்ற காட்சிகள் அடங்கிய தொகுப்புகளை கொண்டு உருவாக்கப்பட்ட 'ரீல்ஸ்' வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதில், மதகு அமைந்துள்ள பகுதியில் 'டிரோன்' பறக்கவிட்டு பதிவான காட்சிகளும் இடம் பெற்று இருந்தது.

    Advertisement

    பொதுவாக முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது பெரியார் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இதனால்அங்கு 'டிரோன்' பறக்க விட தடையுள்ளது. தடையை மீறியும், அனுமதியின்றியும் இந்த 'டிரோன்' காட்சி பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ கேரள வனத்துறையினர் கவனத்துக்கு போனது. இந்த வீடியோ அங்கு பதிவு செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை குறித்த விவரங்கள் வனத்துறை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கேரள வனத்துறை நடத்திய விசாரணையில் பெரியகுளம் எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன் ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்து அந்த காட்சிகளை சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டதை கண்டறிந்தனர்.

    Advertisement

    இந்நிலையில், இருமாநில உறவுகளை கருத்தில் கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக எம்எல்ஏ மீது கேரள வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை.. எனினும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் எச்சரிக்கை மட்டும் விடுத்தனர். புலிகள் காப்பகப் பகுதி என்பதால், இதுபோன்ற தடை செய்யப்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி ட்ரோன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தமிழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். இதனிடையே, இந்த விவகாரம் பெரிதான நிலையில், சர்ச்சைக்குள்ளான வீடியோவை பெரியகுளம் எம்.எல்.ஏ. சபரி ஐயங்கரன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

    English Summary

    Incident involving the flying of a drone over the Mullaperiyar sluice gate area : Forest Department expresses strong disapproval to Tamil Nadu officials. Periyakulam MLA Sabari Ayyankaran removes the drone video from social media