ரேசன் அரிசியை.. சன்னரக அரிசினு சொல்லி விக்கிறீங்களே! கேள்வி கேட்ட மக்கள்! சைஸாக நழுவிய தவெக எம்எல்ஏ

  • தேனி: தமிழகம் முழுவதும் அரிசி விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. எனவே மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கூட்டுறவு அங்காடிகள் மூலம் சன்னரக அரிசியை தவெக அரசு விநியோகித்து வருகிறது. தேனியில் தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா அரிசியை விநியோகித்தபோது, ரேசன் அரிசியைதான் சன்னரக அரிசி என்று சொல்லி ரூ.30க்கு விநியோகிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Advertisement

    மக்கள் சூழ்ந்துக்கொண்டு கேள்வி கேட்டபோது.. விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல், சைலண்டாக ஜெகநாத் மிஸ்ரா அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

    Advertisement

    அரிசி விலை உயர்வும் தவெக அரசும்!

    3-4 மாதங்களுக்கு முன்னர் வரை தமிழகத்தில் சன்னரக அரிசியின் விலை கிலோ ரூ.45-70 என்றுதான் விற்பனையானது. ஆனால், இன்று சாதாரண குவாலிட்டி அரிசியே கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது. இந்த அரிசியை நம்பி குழந்தைகளுக்கு மதிய உணவை தயார் செய்ய முடியாது. சீக்கிரமாகவே தண்ணி விட்டுவிடும். நல்ல அரிசி வேண்டும் எனில், ரூ.90-100 கொடுக்க வேண்டும். கிராமங்களில் மக்களின் ஒரு நாள் கூலியே ரூ.500 தான். அதில் அரிசிக்கு ரூ.100 போய்விட்டால்.. மீதி உள்ளதை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

    Advertisement

    உடனடி நடவடிக்கை

    எனவே அரிசி விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் குரல் எழுப்பினர். இந்த குரலை டெல்டாவிலிருந்து முதலில் ஒன் இந்தியா தமிழ் பதிவு செய்து அரசு கவனத்திற்கு கொண்டு சென்றது. இதையடுத்து சன்னரக அரிசி, கூட்டுறவு அங்காடிகள் மற்றும் அமுதம் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். மக்களின் குறைகளை உடனே கேட்டு நிறைவேற்றும் அரசாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இருக்கிறது என்று பாராட்டினர்.

    சேலத்தில் சம்பவம்

    ஆனால், இந்த பாராட்டு கொஞ்ச நாட்கள் கூட நீடிக்கவில்லை. காரணம், கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி என்று சொல்லி சாதாரண ரேஷன் அரிசியைதான் விநியோகிக்கிறார்கள் என மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர். கடந்த 19ம் தேதி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பொன்னி கூட்டுறவு அங்காடியில் இதேபோல சன்னரக அரிசி கிலோ ரூ.30க்கு விற்கப்பட்டது.

    Advertisement

    ரேஷன் அரிசி விற்பனை

    ஆனால், அதை வாங்கிய மக்கள் "கிலோ ரூ.30 என்று சொல்லி குடும்பத்திற்கு 5 கிலோ விற்கிறார்கள். ரூ.150 கொடுத்து அரிசியை வாங்கி பார்த்தால்தான் தெரிகிறது.. இது சாதாரண ரேஷன் அரிசி என்று. இதை எதுக்கு நாங்க காசு கொடுத்து வாங்கணும்?" என கேள்வி எழுப்பினர். மட்டுமல்லாது வாங்கிய அரிசியை திருப்பி கொடுத்துவிட்டு பணத்தையும் கேட்டு வாக்குவாதம் செய்திருந்தனர்.

    தேனியில் இன்னொரு சம்பவம்

    இப்படி இருக்கையில் இன்று தேனியில் தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா பங்கேற்று சன்னரக அரிசியை கூட்டுறவு அங்காடி மூலம் விற்பனையை தொடங்கி வைத்தார். இங்கேயும் இதே பிரச்சனைதான். சாதாரண ரேஷன் அரிசியை கொடுத்து ஏமாற்றுகிறீர்கள் என மக்கள் எம்எல்ஏவை பார்த்து கேள்வி எழுப்ப.. ஜெகநாத் மிஸ்ரா பதில் சொல்லாமல் அங்கிருந்து நழுவிவிட்டார்.

    Advertisement

    அரிசி விலையை குறைக்க வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை. அதை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சன்னரக அரிசியை தரமானதாக விற்பனை செய்ய வேண்டும். இதையெல்லாம் அரசு செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Topics: #tvk #ration #rice

    English Summary

    Ration Rice: The price of rice has risen sharply across Tamil Nadu. To ensure that the public does not suffer, the TVK government is distributing fine-quality rice through cooperative stores. In Theni, when TVK MLA Jagannath Mishra was distributing this rice, the public alleged that what was being sold for Rs. 30—under the guise of being "fine-quality rice"—was, in fact, ordinary ration rice.