Reels Video: விஜய் எச்சரித்தும் அடங்காத ரீல்ஸ் மோகம்.. கேரள வனத்துறையிடம் கேஸ் வாங்கிய பெரியகுளம் தவெக எம்எல்ஏ

  • தேனி: முல்லை பெரியாறு அணை திறப்பின் போது, பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பக வனப்பகுதியில் ட்ரோன் பறக்கவிட்டு வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட பெரியகுளம் தவெக எம்எல்ஏவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் தவெக எம்எல்ஏ.வின் செயலை அடுத்து, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து எச்சரித்த கேரள வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததில் ரீல்ஸ்க்கு முக்கிய பங்கு உள்ளது என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனமாக உள்ளது. தவெக ஆட்சி அமைந்த பிறகும் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக ஆய்வு என்ற பெயரில் பள்ளிகள், மருத்துவமனைகள் சென்று ரீல்ஸ் வெளியிட்டது கட்சி தலைமைக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

    Advertisement

    விஜய் எச்சரித்தும் ரீல்ஸ் வீடியோ

    இதையடுத்து, முதல்வர் விஜய்யே பள்ளிகளுக்குள் சென்று ரீல்ஸ் மற்றும் வீடியோ எடுக்கக்கூடாது. ரீல்ஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை வேண்டாம் என்று அமைச்சர்கள் மற்றும் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்து இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், கட்சி தலைமையின் உத்தரவை மீறி தவெக எம்எல்ஏக்கள் சிலர் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், பெரியகுளம் தொகுதி தவெக எம்எல்ஏ ஆர்வக்கோளாறில் ரீல்ஸ் எடுத்து கேரள வனத்துறையிடம் வழக்கு வாங்கியுள்ளார். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    தடை செய்யப்பட்ட பகுதியில் வீடியோ

    கேரளாவில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பல்வேறு அணைகள் நிரம்பியுள்ளன. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில் அந்த அணை நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போகத்துக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்காக தேக்கடி வனப்பகுதியான தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகு பகுதிக்கு தவெக எம்எல்ஏக்கள் வருகை தந்து இருந்தனர்.

    கம்பம் எம்எல்ஏ ஜெகன்னாத் மிஸ்ரா, தேனி திமுக எம்பி தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சபரிஐங்கரன், மாவட்ட ஆட்சியர் என பலரும் வந்து இருந்தனர். அப்போது பெரிய குளம் தவெக சபரிஐங்கரன் டிரோன் கேமரா கொண்டு, வீடியோ எடுக்க தடை செய்யப்பட்ட புலிகள் காப்பகம் பகுதியில் வீடியோ எடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. முல்லை பெரியாறு அணையை திறந்துவிட்டபோது பூக்களை தூவிய காட்சிகளை தத்ரூபமாக படம் பிடித்து தனது ஐடிவிங் சார்பில் ரீல்ஸ்காக எம்எல்ஏ தரப்பில் பதிவிடப்பட்டு இருந்தது.

    Advertisement

    தவெக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு

    கழுகு பார்வையில் தண்ணீர் செல்லும் காட்சிகளும் வனப்பகுதிகளும் அந்த ரீல்ஸில் இடம் பெற்று இருந்தது. பின்னணி இசையுடன் பதிவு செய்யப்பட்ட இந்த ரீல்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது கேரள வனத்துறை கவனத்திற்கும் சென்றுள்ளது.

    தடை செய்யப்பட்ட பகுதியில் எப்படி டிரோன் கேமரா கொண்டு படம் எடுக்கலாம் என்று கேரள வனத்துறை போலீசார், தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு இருந்தனர். அதே சமயம் கேரள வனத்துறை புகாரின் பேரில் தவெக எம்எல்ஏ மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Reels Video: TVK MLA from Periyakulam is facing trouble after flying a drone to record a video—which was subsequently released as a 'Reel'—within the protected forest area of ​​the tiger reserve during the opening of the Mullaperiyar Dam. Following the MLA's actions, Kerala Forest Department officials summoned and warned Tamil Nadu Public Works Department officials; reports indicate that a case has also been registered in connection with the incident.