தேனியில் கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு 40 லட்சம் நிவாரணம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு

  • தேனி: தேனி மாவட்டம், தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், நாற்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement


    முதல்வர் விஜய் இரங்கல்

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து, தேனி காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாற்றுப்பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கி.செந்தில்குமார் (வயது 57, எண்: 1447) அவர்கள், நேற்று (08.11.2026) இரவு தனது பணியில் இருந்துள்ளார்.

    Advertisement

    சமதர்மபுரம் பகுதியில் சில நபர்கள் சாலையின் குறுக்கே பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடித்து அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதால் அவர்களை கண்டித்துள்ளார். அப்போது அவர்கள் தாக்கியதில் செந்தில்குமார் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து சிகிச்சைக்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

    சிறப்பு உதவி ஆய்வாளர் கி.செந்தில்குமார் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கி.செந்தில்குமார் அவர்களை இழந்துவாழும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு நாற்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு முதல்வர் விஜய் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

    Advertisement
    தேனியில் ரீல்ஸ் போதை கும்பலால் காவல் சிறப்பு சார்வு ஆய்வாளர் அடித்தே கொலை.. தீபாவளி நாளில் ஷாக்


    தேனி எஸ்எஸ்ஐ கொலை: தமிழக காவல்துறை விளக்கம்

    தேனி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாள செந்தில்குமார் அவர்கள், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த காவல்துறை அலுவலர் ஆவார். 08.11.2026 அன்று இரவு, தனது பணி நேரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பொதுச்சாலையில் இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்ததைக் கவனித்துள்ளார்.

    Advertisement

    பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சாலையில் பயணிப்போருக்கு ஏற்படும் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, இளைஞர்களிடம் சாலையை காலி செய்யுமாறு அறிவுரை வழங்கியதுடன், அவர்களது செயல்பாடுகளைத் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்யவும் முயன்றுள்ளார். அப்போது, இளைஞர் ஒருவரைப் பிடிக்க முயன்றபோது, மற்றொரு நபர் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களைத் தனது முழங்கையால் தாக்கியதில், அவர் நிலைதடுமாறிக் கீழே விழுந்துள்ளார்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் ரோந்துப் படையினரும், காவல் ஆய்வாளரும் அவரை மீட்டு, அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அவர் உயிரிழந்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களின் இழப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தனது பணிநேரத்தை முடித்த பின்னரும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் கடமையுணர்வுடன் செயல்பட்ட அவரது செயல், காவல்துறைப் பணியின் மீதான அவரது அர்ப்பணிப்பையும், பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது.

    Advertisement
    அப்பாவை அடிக்காதீங்க.. கதறிய மகள்.. பிடித்து வெளுத்துவிட்ட புதுச்சேரி பொதுமக்கள்

    இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விரிவான மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், இவ்வழக்கில் விசாரணை மேற்கொள்ள ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளையும் ஆய்வு செய்தனர். காவல்துறையினரின் துரிதமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் காரணமாக, இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள இத்துயரமான இழப்பில் ஒட்டுமொத்த காவல்துறையும் அவர்களுக்குத் துணை நிற்கிறது. உயிரிழந்த காவல் அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Chief Minister Vijay has expressed his condolences to the family of a Special Sub-Inspector of Police who lost his life after being attacked by certain individuals within the jurisdiction of the Theni Police Station in Theni district, and has ordered the provision of a relief fund of forty lakh rupees.