தேனி: தேனியில் சாலையில் பட்டாசு வெடித்த போதை கும்பலை காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளனர். இதனை செல்போனில் பதிவு செய்த சிறப்பு சார்பு ஆய்வாளரை போதைக்கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் மயங்கி விழுந்த எஸ்எஸ்ஐ செந்தில்குமார் உயிரிழந்தார். இந்தசம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகை நேற்று பல இடங்களில் எந்த பிரச்சனையும் இன்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. எந்த வன்முறையும் இல்லாமல் அமைதியாக பல இடங்களில் பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்தது என்றாலும், சில பகுதிகளில் போதைகும்பல்களால் கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. நேற்று ஒரே நாளில் ஐந்து கொலைகள் நடந்துள்ளன. சிவகங்கை மாவட்டம் மானமதுரையில் ஒரு ரவுடி கொல்லப்பட்டுள்ளார். திருச்சி சமயபுரத்தில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடலூரில் ஒரு ரவுடி கொல்லப்பட்டுள்ளார். அந்த வரிசையில் தேனியில் சிறப்பு சார்வு ஆய்வாளர் கொல்லப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
தேனி நகரில் சிறப்பு சார்பு ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த இவர், பணியை முடித்துவிட்டு நேற்று தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தேனியில் சமதர்மபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, மது போதையில் இருந்த கும்பல், சாலையை மறித்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தது. அதைக்கண்ட செந்தில்குமார், அந்த கும்பலை தட்டிக்கேட்டுள்ளார். சாலையை மறித்து வெடி போடக்கூடாது என்றும் கண்டிப்புடன் கூறினார். அப்போது செந்தில் குமாருக்கும் மது போதை கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இளைஞர்கள் செய்த அடவாடியை தனது செல்போனில் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் வீடியோ எடுத்தார். இதை பார்த்த இளைஞர் கும்பல், சார்பு ஆய்வாளர் செந்தில் குமாரை, தலை, நெஞ்சு, கை, கால் உள்பட பல இடங்களில் சரமாரியாக தாக்கினார்கள். இதில் மயக்க அடைந்த காவல் அதிகாரி செந்தில் குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் வழியிலேயே காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் போதை கும்பல் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனியில் போதை கும்பலால் காவல் சிறப்பு சார்வு ஆய்வாளர் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்து