தேனி வருசநாடு மலைவாழ் மக்களை வெளியேற்ற உச்ச நீதிமன்ற உத்தரவு.. வனத்துறைக்கு எதிராக கொதித்த மக்கள்

  • தேனி: வருசநாடு மலைவாழ் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் வனத்துறையைக் கண்டித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., இரண்டு மாவட்ட எஸ்.பி-க்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    Advertisement

    வருசநாடு, மேகமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு மீதான நடவடிக்கை குறித்து, தேனி மாவட்ட ஆட்சியரிடம் நடத்திய பேச்சுவார்த்தை மிகுந்த மனநிறைவளிப்பதாக இருந்தது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    Advertisement

    இப்பிரச்சினை குறித்துத் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் கூறியதாவது:

    "கடந்த 15-ஆம் தேதி முதலமைச்சரைச் சந்தித்து, 'தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்; எந்தக் காரணம் கொண்டும் மக்களை வெளியேற்றக் கூடாது' என்று கோரிக்கை வைத்தோம். அக்கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாகவே இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களின் கோரிக்கைகள் குறித்து விரிவான முறையில் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்துள்ளோம்.

    Advertisement

    மறுசீராய்வு மனு

    தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து விரைவாக மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்பதை, அமைச்சர் கூறியதாக ஆட்சியர் தெரிவித்தார்.

    வன உரிமைச் சட்டம்

    மேகமலை, வருசநாடு மட்டுமல்லாது இம்மாவட்டம் முழுவதும் வன உரிமைச் சட்டப்படி உரிமை பெற வேண்டிய மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, மனைப் பட்டாவும் நிலப் பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; அதற்கெனச் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    வெளியேற்றத் தடை

    அந்தப் பணிகள் நிறைவடையும் வரை யாரையும் வீடுகளை விட்டு வெளியேற்ற மாட்டோம் என்றும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

    Advertisement

    வனத்துறையின் தொந்தரவு

    மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில் விவசாயத்தைத் தடுப்பது, போக்குவரத்தைத் தடை செய்வது போன்ற தொந்தரவுகளை வனத்துறையினர் செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தோம்.

    கூட்டுக் கூட்டம்

    இதற்காக வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய தனிக் கூட்டம் நடத்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

    மேய்ச்சல் உரிமை

    வன உரிமையில் மேய்ச்சல் உரிமை முக்கியமானது என்பதை ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். அதுவும் வனத்துறை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், மாவட்டத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்."

    Advertisement

    "இந்த விஷயத்தில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் நடத்திய பேச்சுவார்த்தை எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது" என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தெரிவித்தார்.

    English Summary

    Tribal people staged a protest in front of the Theni District Collector's office to condemn the Forest Department's move to evict them from the Varusanadu hills. In response, over a thousand police personnel—led by the Dindigul Range DIG and the Superintendents of Police (SPs) from two districts—were deployed for security duty.