வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை

  • தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த சில மாதங்களாகவே நீர்வரத்து இன்றி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. தற்போது கடும் வறட்சி காரணமாக 20 அடி வரை குறைந்துள்ளது. நீரின் அளவு குறைந்ததால் நீர்த்தேக்க பகுதிகளில் மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

    Advertisement

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த சில மாதங்களாகவே நீர்வரத்து இன்றி அணையின் நீர்மட்டம் குறைந்து தற்போது 20 அடி வரை சரிந்துள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை, கடந்த 1959-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ம் தேதி கட்டித் திறக்கப்பட்டது. சுமார் 66 ஆண்டுகளாக தென்மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வரும் வைகை, தமிழகத்தில் கடலில் நேரடியாகக் கலக்காத ஒரே ஆறு ஆகும். இந்த ஆறு, ராமநாதபுரம் பெரிய கண்மாயில் போய் கலந்து கடலில் கலக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வருஷ நாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகி 258 கி.மீ., தென் தமிழகத்தில் ஓடி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைப் பல்லாயிரம் ஆண்டுகள் செழிக்க வைத்து வந்துள்ளது. பல ஆண்டுகளில் முதல் முறையாக வைகை அணை கடுமையாக குறைந்து 20 அடிக்கு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் கடல் போல் காட்சி அளித்த வைகை அணை, இப்போது வறண்டு சுருங்கி கால்வாய் போல் காட்சி அளிக்கிறது.

    Advertisement

    அத்துடன் வைகை அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வைகை அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஆக்சிஜன் அளவு குறைந்து ஆங்காங்கே மீன்கள் செத்து தண்ணீரில் மிதந்து வருகிறது. இதனால் வைகை அணையை சுற்றியுள்ள மக்களுக்கு துர்நாற்றம் வீசி வருவதாக கூறுகின்றனர் . 20 அடிவரை நீர்மட்டம் குறைந்த நிலையில் சேறும் சகதியுமாக வறண்ட பாலைவனம் போல் மாறி இருக்கும் அணையில் தற்போது மீன்களும் செத்து மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

    வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 21.59 அடியாகவும் அணையின் இருப்பு 130 மில்லியன் கன அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 24 கன அடியாக உள்ளது தென்மேற்குப் பருவமழை பெய்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    English Summary

    At the 71-foot-high Vaigai Dam near Andipatti in Theni district, the water level has been dropping rapidly over the past few months due to a lack of inflow; severe drought conditions have now caused the level to fall to 20 feet. Residents have complained of a foul odor in the reservoir area, caused by dead fish floating on the surface as the water level recedes.