கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு

  • தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே புகழ்பெற்ற குரங்கணி அருவிக்கு அருகில் உள்ள கொட்டகுடி மலை கிராமத்தில் முதன்முதலாக ஊருக்குள் வந்த பேருந்து மூலம் 56 ஆண்டுகளாக கனவு நிறைவேறியதால் மலை கிராம மக்கள் மகிழ்ந்தனர். பள்ளி மாணவர்களின் நலம் கருதி கொட்டகுடி மலை கிராமத்திற்கு தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. முதல் முதலாக மலை கிராமத்திற்கு வந்த அரசு பேருந்துக்கு ஆரத்தி எடுத்து தேங்காய் உடைத்து இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர் கிராம மக்கள்.

    Advertisement

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொட்டகுடி மலை கிராமம் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    Advertisement

    இங்கிருந்து 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் போடிநாயக்கனூரில் உள்ள அரசு பள்ளிகள் அரசு நிதி உதவி பள்ளிகளில் பயின்று வருகின்றனர். கொட்டகுடியில் இருந்து பேருந்து போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் இங்கிருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் 2 முதல் 3 கிலோமீட்டர் கால்நடையாக நடந்து சென்று கொட்டகுடி பிரிவு அருகே குரங்கணி செல்லும் பேருந்தில் ஏறி பள்ளிகளுக்கு சென்று வந்தனர்.

    நாள்தோறும் இவர்கள் பள்ளி செல்வதற்காக 32 கிலோமீட்டர் பேருந்தில் பயணித்தும் 2 முதல் 3 கிலோமீட்டர் கால்நடையாக நடந்து செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வந்தது. தங்கள் கொட்டகுடி மலை கிராமத்திற்கு பேருந்து வசதி அல்லது மினி பேருந்து வசதி கோரிக்கை வைத்து பலமுறை போராட்டங்கள் வைத்தும் தேர்தல் புறக்கணிப்பு செய்தும் இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

    Advertisement

    200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலை கிராமத்தில் சுமார் 56 ஆண்டுகள் பேருந்து வேண்டுமென்று கோரிக்கை வைத்து நிலையில் 26 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது ஆனாலும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படாத நிலையில் 2 முதல் 3 கிலோமீட்டர் கால்நடையாக நடந்து செல்ல வேண்டிய சூழல் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவர்களுக்கு ஏற்பட்டது.

    மழைக்காலங்களில் நனைந்து நடந்து சென்று பள்ளி செல்ல வேண்டிய நிலையில் இப்பகுதியில் இருந்து வந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் குழந்தைகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் நபர்கள் செல்லும் வகையிலாவது காலையிலும் மாலையிலும் பேருந்து வசதி அல்லது மினி பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    Advertisement

    அதனைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை அன்று காலை தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கொட்டக்குடிக்கு பேருந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. நேற்று மாலை 5.30 மணிக்கு கொட்டகுடி குரங்கணி பகுதிகளில் தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பாக பேருந்து போக்குவரத்து தொடங்கியது.

    தினமும் காலை மாலை குரங்கணிக்கு 56 பயணிகள் செல்லும் வசதி கொண்ட பேருந்து மாற்றப்பட்டு 45 பயணிகள் செல்லும் குறுகிய அளவு பேருந்து மூலம் கொட்டக்குடிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதுவரை பேருந்து தடமே கண்டறியப்படாத கொட்டகுடி மலை கிராமத்தில் முதன் முதலாக பேருந்து நுழைந்தது கண்டு மபை கிராம மக்கள் உணர்ச்சி பொங்க மிகுந்த மகிழ்ச்சியுடன் பேருந்து வரவேற்றனர்.

    Advertisement

    தங்கள் வீட்டின் அருகிலேயே தங்கள் குழந்தைகள் பேருந்து மூலம் இறக்கி விடப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் பேருந்திற்கு பூ மாலை அணிவித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஆரத்தி எடுத்து தேங்காய் உடைத்து வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி தங்கள் ஊருக்கு முதல் முதலாக பேருந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

    காலை 7 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு செல்லும் இந்தப் பேருந்து குரங்கணி சென்று அங்கிருந்து கொட்டகுடி சென்று பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை ஏற்றிக்கொண்டு போடிநாயக்கனூர் வந்தடையும் மாலை சுமார் 5.30 மணி அளவில் போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும் இந்த பேருந்து கொட்டகுடியில் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பயணிகளை இறக்கிவிட்டு குரங்கணி சென்று அங்கு பயணிகளை இறக்கி அங்கிருந்து போடிநாயக்கனூர் திரும்பும் என்று போடிநாயக்கனூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் ராஜா தெரிவித்தார்.

    English Summary

    Residents of the Kottakudi hill village—located near the famous Kurangani Falls close to Bodinayakanur in Theni district—rejoiced as a long-held dream spanning 56 years was fulfilled with the arrival of the first-ever bus into their village.