தேனி: தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள சிறைச் சாலையில் 17 கைதிகள் நேற்று இரவு தப்பிய நிலையில் அதில் ஒரு கைதி ஆட்டோவில் தப்பிச் செல்ல முயன்ற போது தனிப்படை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் இதுவரை 13 கைதிகளை பிடித்துள்ளனர். எஞ்சியுள்ள 4 கைதிகளை தேடி வருகிறார்கள்.
தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்ற கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு சென்ற இரண்டாம் நிலைக் காவலர் ஸ்டாலின் பிரபுவை கைதிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களைத் தாக்கி, சாவிகளைப் பறித்து, சிறையின் பிரதான நுழைவாயிலைத் திறந்து கொண்டு 17 கைதிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து தப்பிச் சென்ற கைதிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தேடி வருகிறார்கள். அவர்களின் தேடுதல் வேட்டையில் காலையில் 5 பேரை பிடித்தனர். அதில் ஒருவர் ஆட்டோவில் ஏறி தப்ப முயன்ற நிலையில் அவரை தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அதாவது கானா விளக்கு என்ற பகுதி அருகே ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்த ஐந்தாவது விசாரணை கைதியை தனிப்படை போலீசார் கைது செய்து அதே ஆட்டோவில் தேக்கம்பட்டி சிறைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் கூறுகையில், கண்டமனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது லிங்க பிரசாத் என்பவர் தனது ஆட்டோவில் ஏறியதாகவும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறக்கிவிடுமாறு கூறியதாக தெரிவித்தார். ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகவும், தன்னை மருத்துவமனையில் இறக்கி விடுமாறும் சொன்னார். கானாவிளக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போலீசார் தனது ஆட்டோவை நிறுத்திய போது தான் லிங்க பிரசாத் என்பவர் சிறைக் கைதி என தெரியவந்தது என ஆட்டோ ஓட்டுனர் தெரிவித்தார். பின்னர் அந்த ஆட்டோவிலேயே போலீசார் லிங்க பிரசாத்தை தேக்கம்பட்டி சிறை வளாகத்திற்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் 17 பேரில் 5 பேர் சிக்கிய நிலையில் மீதமுள்ள 12 பேரை போலீஸார் தேடி வந்தனர். அப்போது தேக்கம்பட்டி சிறைக்கு பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி பதுங்கி தப்பிக் கொண்டிருந்த 8 சிறைக் கைதிகளை போலீஸார் டிரோன் மூலம் கண்றிந்து அவர்களையும் பிடித்தனர். இதனால் மீதமுள்ள 4 பேரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அதில் தேனி மாவட்டம், சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேனி மாவட்டச் சிறையில், 200 கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது. இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி நிலவரப்படி சிறையில் மொத்தம் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று இரவு கைதி ஒருவருக்கு வலிப்பு வந்ததாக கூறி மற்ற கைதிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கு சென்ற காவலர் ஸ்டாலின் பிரபுவை கைதிகள் தாக்கிவிட்டு, வெளியே வந்த அவர்கள் மற்ற காவலர்களையும் தாக்கி, சாவியை பறித்துக் கொண்டு பிரதான வாயில் வழியாக தப்பிவிட்டதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, தேனி மாவட்டச் சிறையைச் சேர்ந்த 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.தேனி ஜெயில் பிரேக்.. திமுக மீது எப்படி பழியை திருப்பலாம்? தவெகவிற்கு 10 சுவாரசியமான ஐடியாக்கள்