தேனி சப் இன்ஸ்பெக்டருக்கு ஒரே நாளில் பறிபோன வேலை.. செய்யக்கூடாத வேலையால் ட்விஸ்ட்

  • தேனி: அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது உறுதியானால் வேலை பறிபோகும் அபாயம் அதிகம். அதனை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு வேலை பறிபோயிருக்கிறது. விபசார வழக்கில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் மீதான விசாரணையை தொடர்ந்து அவர் பணியில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டார்.

    Advertisement

    தேனி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாத காலகட்டத்தில் தேவராஜ் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அப்போது, தேனி பாரஸ்ட்ரோடு பகுதியில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் 2 பேர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

    Advertisement

    இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவரிடம் இருந்து தேவராஜ் 'ஜிபே' மூலம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியாவுக்கு புகாராக போனது. அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். விசாரணை நடந்து வந்த நிலையில், அவர் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர் புகாரில் முகாந்திரம் இருந்த காரணத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தேவராஜை, பணியில் இருந்து நிரந்தரமாக விடுவித்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவிட்டார்.

    Advertisement

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தேவராஜ் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர். கடந்த 2023-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். இவர் மீது ஏற்கனவே சில குற்றச்சாட்டுகள் உயர் அதிகாரிகளுக்கு சென்று இருக்கிறது. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வந்தார்கள். தற்போது விபசார வழக்கில் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அவர் பணியில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்பட்டுள்ளார்' என்றார்கள். லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், சப் இன்ஸ்பெக்டர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் காவல்துறையினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒரு கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பது மட்டுமே, ஒழுங்கு நடவடிக்கையை நிறுத்தி வைப்பதற்கான காரணமாக அமையாது. அரசாங்கத்தின் இத்தகைய அணுகுமுறை நிர்வாகத்தின் நலனுக்கோ அல்லது பொதுச்சேவையில் திறனை மேம்படுத்துவதற்கோ உதவாது. மாறாக, இது தவறு செய்த அதிகாரிகள் தங்கள் தவறான நடத்தையின் விளைவுகளிலிருந்து தப்பிக்கவோ அல்லது அவற்றை தாமதப்படுத்தவோ வழிவகுக்கும் என்று அண்மையில் தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Topics: #தேனி

    English Summary

    Government employees face a high risk of losing their jobs if proven guilty of accepting bribes, and such incidents occur frequently. A police sub-inspector in Theni has lost his job; he was dismissed from service following an inquiry into allegations that he had accepted a bribe in connection with a prostitution case.