தேனி: தேனி மாவட்டம் வருஷநாடு மற்றும் மேகமலை பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுமார் 8,000 த்துக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்த்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு மற்றும் மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர் என்று கூறி வெளியேற்றும் நடவடிக்கைகளில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது.
முதல் கட்டமாக அந்தப் பகுதி மக்களுக்கு வெளியேற்ற நோட்டீஸ் கொடுத்து வரும் சூழலில் இது அந்த பகுதி மக்களை மிகவும் கொந்தளிக்க செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் ஆதரவுடன் வருசநாடு பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் அப்பகுதி மக்கள். இந்த நிலையில் இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் அதிமுக, தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 8,000 க்கு மேற்பட்ட அந்தப் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் என போராட்டத்தில் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் பேசிய பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த பகுதி மக்களை வெளியேற்றும் முயற்சிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதாக அறிவிப்பு செய்தது. இந்த பகுதி மக்களை சற்று ஆறுதல் அளித்துள்ளது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் வரை பொதுமக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட மாட்டோம் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம் தெரிவித்தார். இந்த மலை கிராமம் நம்பியே தாங்கள் வசித்து வருவதாகவும் பல ஆண்டு பல தலைமுறைகளாக வசித்து வந்த தங்களுக்கு இதை விட்ட வேறு வாழ வழி இல்லை என்றும் இடத்தை காலி செய்ய வற்புறுத்தினால் அந்த இடத்தை விட்டு வெளியேறாமல் உயிர் தியாகம் செய்வோம் என வேதனையுடன் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். மக்களின் போராட்டம் காரணமாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று மாலை முதலே முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. தென் மண்டல ஐஜி விஜேந்திர பிராதி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், அம்மாமாவட்ட காவல் துறையினர் என 1200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டம் காரணமாக இந்தப் பகுதியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மலை கிராம மக்களின் போராட்டம் தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.