தேனி: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் களம் அப்படியே மாறியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாகிவிட்டது. தமிழகத்தை அதிகமுறை ஆண்ட அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியே புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். விரைவில் அரசியல் கட்சியையும் அவர் ஆரம்பிக்கவுள்ளார். இந்நிலையில் அண்ணாமலை ஒரு மாயமான். ஆர்எஸ்எஸ் மூலம் அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்று வீரமணி விமர்சித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திராடவிர் கழகம் தலைவர் வீரமணி, "அண்ணாமலைக்கு பழைய கட்சி புளித்து போய்விடவில்லை. அவரின் பழைய கட்சி பாஜக. அந்த கொள்கை பிடிக்காமல் அவர் வெளியில் வரவில்லை. அந்த கொள்கைக்கு மறு உருவமாக ஒரு மாயமானாக அவரை ஆர்எஸ்எஸ் அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாட்டை என்ன செய்தாலும் பிடிக்க முடியவில்லை.
இங்கு காலூன்ற முடியவில்லை என்பதால் அண்ணாமலைக்கு புதிய அவதாரம் கொடுத்துள்ளனர். அவர் அவ்வபோது தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொள்வார். திடிரென விவசாயம் பார்க்கிறேன் என்பார், அரசியலில் இருந்து ஒதுக்கிவிட்டனர் என்பார். இப்படி பல நிலைப்பாடுகளை எடுத்துள்ளார். எந்த நிலைப்பாட்டிலும் அவர் உறுதியாக இருக்க மாட்டார். ஆனால் இப்போது ஏற்பட்டிருப்பது பாஜக என்ன செய்தாலும் தமிழகத்தில் அவர்களால் வெற்றி பெற முடிவதில்லை. சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்திற்கு 3 லட்சம் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை அனுப்பினர். அப்படியும் தேர்தலில் வெற்றி பெறவில்லை. இதனால் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து ஆர்எஸ்எஸ், உள்துறை அமைச்சரிடம் ஆசிர்வாதம் செய்து வந்துள்ளார். அமித்ஷாவால் அனுப்பப்பட்ட மாயமான் அண்ணாமலை. இளைஞர்களை அவர் பக்கம் இழுக்கிறேன் என்கிறார். இப்போது வரை தன்னுடைய கொள்கை என்ன என்பதை அவர் சொல்லவில்லை. கட்சிக்கு என்ன பெயர் என்று கூறவில்லை. அவரை எல்லாம் பொறுத்திருந்து பார்க்க அவசியமில்லை. தெளிவாகவே சொல்லலாம். இது மற்றொரு வடிவத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் கட்சி. பாஜகவுக்கு செல்வாக்கு தேய்ந்துவிட்டது என்பதால், அதே சரக்கில் லேபிள் மாறியுள்ளது. அவ்வளவு தான். சரக்கு அதே சரக்கு. புளித்து போன சரக்கு. தமிழத்தில் ஏற்க முடியாத நிலை அவர்களுடையது. அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எவ்வளவு வேகமாக வருகிறதோ, அவ்வளவு வேகமாக மறைந்துவிடும். ஊடகங்களின் தயவால் தான் 2 மணி நேரத்தில் 12 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் என்கிறார்கள். பாஜகவில் அவருடன் இருந்த பஜனை கோஷ்டி அப்படியே அண்ணாமலை பின்னால் வந்துள்ளது. அவ்வளவுதான். அவரால் வேறு எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது. அதை நம்பி எந்த இளைஞர்களும் செல்ல தயாராக இல்லை. அவருக்கு கொள்கை முக்கியமல்ல. கட்சி தான் முக்கியம். பயிற்சி எல்லாம் கொடுக்கிறோம், திறந்த மூளை வேண்டும் என்கிறார். இதன் மூலம் இருந்த மூளைகள் சரியில்லை என ஒப்புக் கொண்டதற்கு நன்றி" என்றார்.அண்ணாமலை மாயமான்
அதே புளித்து போன சரக்கு