தேனியில் ஒரு அத்திப்பட்டி.. மாஞ்சோலை போல் 98 கிராம மக்கள்.. வருசநாடு, மேகமலையில் என்னாகும் இனி?

  • தேனி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் பல தலைமுறைகளாக மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கு விவசாயமும் செய்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான மக்களுக்கு பட்டா இல்லை.. இந்த சூழலில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைப் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால், அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து அந்த மக்கள் போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டம் நாடு முழுக்க பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    சென்னை, பெங்களூரில் வசிக்கும் பலருக்கும் பிடித்த சுற்றுலா தலங்களில் ஒன்று மேகமலை.. தேக்கடி, மூணாறு, கொடைக்கானல், வாகமன் வருவோர், அப்படியே போகும் இடம் மேகமலை.. இந்த மேகமலை என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் தொடங்கி அப்படியே தேனி மாவட்டம் வழியாக கூடலூர் வரை உள்ள பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைப் புலிகள் காப்பகத்தில் இருக்கிறது. பொதுவாக புலிகள் காப்பகம் அறிவிக்கப்படடால், அந்த பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களை ஆக்கிரிமிப்பாளர்களாக கருதி வெளியேற்றப்பட உள்ளார்கள்.

    Advertisement

    புலிகள் காப்பகம்

    மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகமாகும். இந்தப் புலிகள் காப்பகத்தை உருவாக்குவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள ஒரு லட்சம் (1,01,657.13) ஹெக்டேர் நிலம் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புலிகள் காப்பகம் விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பரந்து விரிந்து காணப்படுகிறது.


    மலை கிராமங்கள்

    இதில் தான் தேனி மாவட்டத்தின் கடமலைகுண்டு- மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வண்டியூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கிராம மக்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகிறார்கள். இங்கு காய்கறிகள் பயிரிடுவது, இலவம் பஞ்சு மரங்களை வளர்ப்பது போன்ற விவசாயம் செய்து வருகிகறார்கள்.. இப்பகுதி 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலைப் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement


    மக்கள் போராட்டம்

    இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலைப் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால், அங்கு வாழும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்கள், வனத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    5000 ஹெக்டேர் பரப்பளவு

    இந்த பிரச்சனை ஒருபுறம் எனில் தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூர், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூர் ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவு மலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையின் அனுமதியின்றி அங்கு சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் செயல்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2026ம் ஆண்டு மே 29ம் தேதியன்று முக்கியமான உத்தரவு பிறப்பித்தது.

    Advertisement

    உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன

    அந்த உத்தரவினை படித்த வருசாடு பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய மே மாதம் பிறப்பித்த உத்தரவில், "தேனி மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, தேனி மாவட்டம் முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மொத்தம் 4,601 ஆக்கிரமிப்பாளர்கள் 5,072.653 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். இது தொடர்பான அறிக்கை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    Advertisement

    ஆக்கிரமிப்பாளர்கள் என அறிக்கை

    தேனி மாவட்ட ஆட்சியர் பெயரில் அதிகாரிகள் சமர்பித்த 4,601 ஆக்கிரமிப்பாளர்கள் என்ற இந்த புள்ளி விவரம் தான் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அந்த காலத்தில் பலரும் பத்திரம் பதிந்து இருப்பார்கள், ஆனால் பட்டா அவர்கள் பெயரில் இருக்காது. ஏன் பட்டாவே வாங்கியிருக்க மாட்டார்கள். இப்படி வசித்த பலர் வெளியேற்றப்பட உள்ளார்கள்.

    நலத்திட்டங்களுக்கு தடை

    அதுவும் எப்படி என்றால், உச்ச நீதிமன்ற உத்தரவின் முக்கியமான விவரங்களை பார்ப்போம்.ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான தெளிவான, காலக்கெடுவுடன் கூடிய திட்டத்தை ஒரு மாதத்திற்குள் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் (சிஇசி) அரசு சமர்ப்பிக்க வேண்டும். வனப்பகுதிகளுக்குள் அமைந்துள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள், வசதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத உட்கட்டமைப்புகள் வன நிலத்திலிருந்து ஆறு மாத காலத்திற்குள் நிறுத்தப்பட்டு பிரிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் மின்சாரம், சாலை வசதி, போக்குவரத்து மற்றும் பிற அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    துணை ராணுவம் வெளியேற்றலாம்

    அதேபோல் அனைத்து ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றப்படும் வரை, வனப்பகுதியில் எந்தவொரு புதிய வணிக அல்லது வனம் சாராத திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது. இந்த உத்தரவுகளை மாநில அரசு நிறைவேற்றத் தவறினால், ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவப் படையை ஈடுபடுத்த, சிஇசி பரிந்துரைக்கலாம். ஆகஸ்ட் 28, 2026-க்குள் சிஇசி தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 1, 2026 அன்று நடைபெறும்" என உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் கருணை என்ற பெயரில் அவர்களை வெளியேற்ற தவறக்கூடாது என்று தெளிவாக கூறியுள்ளது. அப்படி மீறினால் துணை ராணுவத்தை வைத்து வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என்ற அச்சமும் இருக்கிறது.

    மக்களுக்கு நிலம் சொந்தம்

    தற்போதைய சூழலில் வன உரிமைகள் சட்டத்தின்படி (2006), 13 டிசம்பர் 2005-க்கு முன்பாக வனப்பகுதிகளில் குடியிருந்த பழங்குடியினர் அல்லது குறைந்தது மூன்று தலைமுறைகளாக (அதாவது 75 ஆண்டுகளாக) வனப்பகுதிகளிலேயே வாழ்ந்து, வனத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பிற பாரம்பரிய வனவாழ் மக்கள் சில உரிமைகளைப் பெறத் தகுதியானவர்கள் என்பது சட்டமாகும். சட்டம் அப்படி இருக்க 75வருடங்களாக குடியிருக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் அறிவித்தது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். உண்மையில் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் இருக்கிறார்கள், அதற்காக ஒட்டுமொத்த மக்களும் ஆக்கிரமிப்பாளர்களாக அறிவிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்விகள் அந்த மக்களிடையே எழுந்துள்ளது.

    முதல்வர் விஜய் கவனத்திற்கு

    'மாஞ்சோலை போல வருசநாடு பகுதியின் 98 கிராம மக்களும் வாழ்ந்த மண்ணை விட்டு வெளியேற்றப்படுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். இது தேனி மாவட்டத்தின் முக்கியமான பிரச்சனையாக மாறி உள்ளது. தேனி மாவட்டம் முழுவதும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். முதல்வர் விஜய் இந்த விவாகரத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மீறி உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மக்கள் வெளியேற்றப்படடால், மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவும், மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சனையாகவும் வெடிக்கும் என்கிறார்கள் தேனி மாவட்ட சமூக ஆர்வலர்கள்.

    English Summary

    Villagers from 98 villages are being evicted in Theni, much like what happened in Manjolai. What will become of Varusanadu and Megamalai now?