திருநெல்வேலி: நெல்லை கவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் , கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதான குற்றச்சாட்டு அறிக்கையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
நெல்லை கவின் கொலை வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "கொலை நடந்தபின்பு சுர்ஜித்தை, அவரது தந்தை சரவணன் சந்தித்து ஆடைகளை அழிக்கவும், செல் போனை சேதப்படுத்தவும், வாகன நம்பர் பிளேட்டை அகற்றவும் அறிவுறுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. கண்காணிப்பு கேமரா காட்சிகள், புகைப்படம், வீடியோ பதிவுகள் என எதுவும் இல்லை. மனுதாரர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வெறும் அனுமானத்தின் அடிப்படையிலேயே உள்ளன. சாதிப்பெயர் எதையும் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படவில்லை. பள்ளிப்பருவத்தில் ஒரு பழக்கத்தில் ஈடுபடும் மகனையோ அல்லது மகளையோ பெற்றோர் கண்டிப்பது இயல்பானதுதான்.
எனவே சாதி குறித்த குறிப்பு, அவமதிப்பு நடவடிக்கைகள் நடந்ததாக எங்கும் கூறப்படவில்லை. இந்த சம்பவத்தில் முன்கூட்டியே திட்டமிடல், கூட்டுச்சதி இருந்ததாக அரசு தரப்பு குற்றம் சாட்டவில்லை. எனவே இந்த வழக்கில் எஸ்.சி. எஸ்.டி. சட்டத்தின் பிரிவு 3 (2) (v) -ஐ பயன்படுத்துவதற்கான தேவை இல்லை. மனுதாரர்கள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால் இந்த தீர்ப்பு அதனை கட்டுப்படுத்தாது. சுர்ஜித்துக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஜெயபாலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் சுர்ஜித்தின் அப்பா, அம்மா மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜான் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "நெல்லை கவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் (A1) பெற்றோர்களான சரவணன் (A2), கிருஷ்ணகுமாரி (A3) ஆகியோர் மீதான குற்றச்சாட்டு அறிக்கையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு குற்றவழக்கில் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று, இருதரப்பினரின் வாதங்களையும் ஆதாரங்களையும் பரிசீலித்த பின்னரே குற்றம் நிரூபிக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும். ஆனால், விசாரணை முழுமையாக நடைபெறுவதற்கு முன்பே குற்றச்சாட்டு அறிக்கை ரத்து செய்யப்படுவது தொடர்பாக பல்வேறு சட்டரீதியான கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களின் பின்னணி மற்றும் வழக்கின் முழுமையான சூழ்நிலைகள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட வேண்டியது அவசியம். சரவணன் கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், மற்றொரு கொலை வழக்கில் கூலிப்படையினருடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், கவின்கொலை வழக்கில் சரவணன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடைபெறுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. எனவே, இந்த விவகாரத்தில் சட்டரீதியான அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து, மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உரிய மேல்முறையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம்." இவ்வாறு கூறியுள்ளார்.குற்றப்பத்திரிகை ரத்து