திருநெல்வேலி: தீபாவளிக்காக நெல்லையில் தித்திக்கும் அல்வா தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதிலும் மருத்துவ குணம் கொண்ட பருத்திப்பால் அல்வா, கருப்பு கவுனி அரிசி அல்வாவுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் ஆர்டர்கள் குவிந்து வருவதாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார்கள்.
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் என மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. அதிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலியின் அடையாளமாக விளங்கும் புகழ்பெற்ற அல்வா தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. தீபாவளி பண்டிகையின்போது உறவினர்களுக்கு பரிசாக வழங்குவதற்கும், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கும் திருநெல்வேலி அல்வாவுக்கு தனி வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக நெல்லையில் உள்ள அல்வா தயாரிப்பு நிறுவனங்களில் ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பாளையங்கோட்டையில் நான்கு தலைமுறைகளாக அல்வா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ராம் லாலா கடையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு புதிய வகை அல்வாக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் கருப்பட்டி அல்வா, தடியங்காய் அல்வா, இளநீர் அல்வா என வித்தியாசமான வகைகளில் அல்வா தயாரித்து வாடிக்கையாளர்களை கவர்ந்த இவர்கள், இந்த ஆண்டு மருத்துவ குணங்கள் கொண்டதாகக் கருதப்படும் பருத்திப்பால் அல்வா மற்றும் கருப்பு கவுனி அரிசி அல்வாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த புதிய வகை அல்வாக்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் ஆர்டர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அல்வா தயாரிக்கும் பணிகளை உற்பத்தியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, பருத்திப்பால் அல்வா தயாரிக்கும் முறை பாரம்பரியமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. முதலில் தேவையான அளவு பருத்திக் கொட்டைகளை சுமார் ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கின்றனர். பின்னர் ஊறவைத்த பருத்திக்கொட்டைகளை கிரைண்டரில் அரைத்து அதிலிருந்து பருத்திப்பால் எடுக்கப்படுகிறது. இதனை வடிகட்டி, அதனுடன் தேவையான அளவு கருப்பட்டி பாகு மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அல்வா தயாரிக்கும் பெரிய பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்துகின்றனர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கிளறி தயாரிக்கப்படும் இந்த அல்வா, சரியான பதத்திற்கு வரும்போது அதனுடன் நெய், முந்திரி மற்றும் பாதாம் பருப்புகள் சேர்க்கப்படுகின்றன. தொடர்ந்து கிளறி அல்வா பதத்திற்கு வந்ததும் பாத்திரங்களில் எடுத்து விற்பனைக்காக தயார்படுத்துகின்றனர். பாரம்பரிய சுவையுடன் புதிய வகை இனிப்புகளையும் அறிமுகப்படுத்தி வரும் நெல்லை அல்வா தயாரிப்பாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி ஆர்டர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நெல்லையில் அல்வா தயாரிப்புப் பணிகள் இரவு, பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நெல்லை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் மக்களே நீங்களும் சட்டுபுட்டுனு ஆர்டர் போடுங்கள்.ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிரடி முடிவு! தீபாவளி கட்டணக்கொள்ளைக்கு விடிவு? புக்கிங் செயலிகளுக்கு செக்