போஸ்டர் கூட அடிக்காத இசக்கி சுப்பையா.. அப்செட்டில் நெல்லை தவெக.. அம்பை தொகுதியில் புகையும் பிரச்சனை!

  • நெல்லை: அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையாவின் செயல்பாடுகள் லோக்கல் தவெகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவி அறிவிக்கும் வரை விஜய்க்காக ஒரு போஸ்டர் கூட இசக்கி சுப்பையா அடிக்கவில்லை என்று கூறும் தவெகவினர், மீண்டும் எம்எல்ஏ-வாக செயல்பட அனுமதிக்கோரி மனுதாக்கல் செய்தது தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளதாகவும் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இசக்கி சுப்பையா. தேர்தலுக்கு பின் தவெக ஆட்சிஅமைத்த சூழலில், ஆளுங்கட்சியில் இருந்தால் தான் தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என்று கூறி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினார். இதனால் தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    Advertisement

    இதனிடையே அதிமுக சார்பாக நீதிமன்றம் சென்றதால், இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது. உடனடியாக இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, இன்னும் 6 மாதங்களுக்கு மேல் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் இடைத்தேர்தல் வரும் வரை எம்எல்ஏ-வாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா மனுதாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

    ஆனாலும் இசக்கி சுப்பையாவின் செயல்பாடுகள் தவெகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளரான இசக்கி சுப்பையா, தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளராகவும் இருந்து வருகிறார். இதுதொடர்பாக நெல்லை தவெக நிர்வாகிகள் பேசுகையில், அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த 2 மாதங்களில் மிக முக்கிய பொறுப்பு இசக்கி சுப்பையாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதனைவிட வேறு என்ன முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆனால் இசக்கி சுப்பையா தனது தொகுதியில் வேலை செய்வதே கிடையாது. விஜய்யின் பிறந்தநாளுக்கு ஒரு போஸ்டர் கூட அவர் பெயரில் அடிக்கப்படவில்லை. பதவி கொடுத்த பின் செலவு செய்யலாம் என்று அமைதியாக இருந்தார். அம்பாசமுத்திரம் வழக்கமாக அதிமுக வலுவாக இருக்கும் தொகுதி. இவர் அதிமுகவில் வென்றுவிட்டு தவெகவில் இணைந்திருக்கிறார்.

    இதனால் அதிமுக அனுதாபிகள் கோபமாக உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் தவெக வெல்ல வேண்டுமென்றால், இவர் உடனடியாக பணிகளை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அவரோ, ராஜினாமா செய்த பதவியை மீண்டும் கேட்டு வருகிறார். இதனை என்னவென்று சொல்வது.. விஜய் தரப்பில் இடைத்தேர்தல் வேகமாக நடத்தப்பட வேண்டும் என்று கூறும் போது, இசக்கி சுப்பையா போட்டுள்ள மனு எங்களுக்கே அதிர்ச்சி தான்.

    Advertisement

    மீண்டும் அதிமுக பக்கம் செல்ல தயாராகிவிட்டாரோ என்ற சந்தேகம் எங்களுக்கே வந்துவிட்டது. நிச்சயமாக தவெக தலைமையிடம் இந்த விஷயத்தை கொண்டு செல்வோம் என்று கூறுகின்றனர். அதேபோல் இசக்கி சுப்பையாவுக்கும், லோக்கல் நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடு தொடர்ந்து நீடித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இன்னொரு பக்கம் இசக்கி சுப்பையாவுக்கு பதவி கிடைத்தாலும், அதற்கு பெரிய அதிகாரம் எதுவும் இல்லை என்றும் அவரின் ஆதரவாளர்கள் அப்செட்டில் இருக்கின்றனர்.

    English Summary

    Esakki Subbaiah: Ex-AIADMK MLA Esakki Subbaiah Actions Trigger Outrage Among Local TVK Cadres