நெல்லை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கவிதை கோபால் மீது நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி மேரி (22). பி.ஏ. பட்டதாரியான இவர் இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருந்து வருகிறார். இவரை இரண்டு நாட்களுக்கு முன்பு கவிதை கோபால் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அஸ்வினி மேரியின் தொலைபேசி எண்ணை அவரது நண்பர் மூலம் பெற்றதாகக் கூறிய கவிதை கோபால், திரைப்படங்களில் நடிக்க விருப்பம் உள்ளதா எனக் கேட்டுள்ளார்.
தொடர்ந்து திரைப்பட வாய்ப்பு பெற வேண்டுமானால் சில அட்ஜஸ்ட்மென்ட்கள் செய்ய வேண்டும், பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறியதுடன், உடல் ரீதியாகவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் எனப் பேசியதாகவும், உடனடியாக சென்னைக்கு வருமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்வினி மேரி, தனது உறவினர் மூலம் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், ஆபாசமாகப் பேசி பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வற்புறுத்திய கவிதை கோபால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கவிதை கோபால் தனது வாட்ஸ்அப் முகப்புப் படத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இதுபோன்ற செயல்களால் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் நிலை உள்ளதாகவும், இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கவிதை கோபால், "கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான்" என்ற கவிதை வீடியோ மூலம் பிரபலம் ஆனவர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு சென்றார். சில படங்களில் கூட்டத்தில் ஒருவராக முகம் காட்டியுள்ளார். 'நீயா நானா' விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிதை கோபால், "என் பேரு கோபால்.. என்னை எல்லோரும் கோபால் கோபால்னு கூப்பிடுவாங்க" எனச் சொல்லி மிரள வைத்தவர். கொலைவெறிக் கவிதையால் மிரள வைக்கும் கவிதை கோபால், இன்ஸ்டாகிரம் பிரபலமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவான்மியூர் லதாவிடம் இப்படியொரு அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்களா? செக்யூரிட்டி வேலை மெசேஜில் ட்விஸ்ட்