மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்களிடம் கை, கண் ரேகைகள் சோதனை.. தவெக அரசின் ஷாக் மூவ்!

  • திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு இஸ்லாமியர்களை அழைத்து கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படங்களை பதிவு செய்யும் காவல்துறையின் நடவடிக்கை தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சாதாரண மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என பல தரப்பிலும் இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், ஆளும் தவெக அரசின் காவல் துறை நிர்வாகம் மீது அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

    Advertisement

    மேலப்பாளையத்தில் நடந்தது என்ன?

    கடந்த சில தினங்களாக மேலப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களைக் காவல் நிலையத்திற்கு வருமாறு போலீசார் அழைப்பு விடுத்தனர். அங்கு சென்றவர்களிடம் நவீன பயோமெட்ரிக் கருவிகள் மூலம் கைரேகைகள், கண் கருவிழி ரேகைகள் பதிவு செய்யப்பட்டு, பல கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

    Advertisement

    இதற்கு எந்தவித முன் அறிவிப்போ, சட்டப்பூர்வ எழுத்துப்பூர்வ சம்மனோ வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதேனும் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள், வழக்குகள் முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவர்கள் கூட காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது அங்கு வாழும் மக்களிடையே பெரும் அச்சத்தையும், தாங்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறோமோ என்ற மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

    காவல்துறையின் விளக்கம்

    இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, நெல்லை மாநகர காவல்துறை ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், "தென் மண்டல காவல்துறையின் கீழ் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் பட்டியலை நவீனப்படுத்தவே இந்த பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. நெல்லை மாநகரில் உள்ள 640 பேரில் மேலப்பாளையத்தில் மட்டுமல்லாமல், அனைத்துப் பகுதிகளிலும் உள்ளவர்களிடமும் இந்த விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. யாரையும் குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தவில்லை" என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    அரசின் நடவடிக்கை மீது எழும் நியாயமான கேள்விகள்

    காவல்துறை குற்றவாளிகளைக் கண்காணிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், மேலப்பாளையத்தில் கையாளப்பட்ட விதம் கடுமையான மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகிறது:

    சட்ட நடைமுறைகள் எங்கே?: ஒரு குடிமகனின் தனிப்பட்ட பயோமெட்ரிக் தரவுகளை எடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவோ அல்லது முறையான சம்மனோ தேவையில்லையா? சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அடிப்படை உரிமைகளை பறிக்கலாமா?

    பழைய வழக்குகளுக்கு இப்போதும் தண்டனையா?: குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற மக்கள் போராட்டங்களில் ஜனநாயக வழியில் குரல் கொடுத்தவர்களையும், எப்போதோ முடிந்துபோன வழக்குகளில் தொடர்புடையவர்களையும் குற்றவாளிகள் பட்டியலில் வைத்து பயோமெட்ரிக் எடுப்பது எந்த வகையில் நியாயம்?

    Advertisement

    பொதுமக்கள் அச்சம்: காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட பலருக்கு அவர்கள் ஏன் அழைக்கப்படுகிறார்கள் என்ற காரணமே சொல்லப்படவில்லை. இத்தகைய ரகசிய அணுகுமுறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வை விதைக்காதா?

    அரசியல் வாக்குறுதியும் எதார்த்தமும்: மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் வெளிப்படையான மக்களாட்சி என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழக அரசு, தனது காவல்துறையின் இத்தகைய செயலை எப்படி அனுமதிக்கிறது? தேர்தல் களத்தில் அளித்த வாக்குறுதிகளுக்கு இது நேர்மாறான செயல் அல்லவா?

    கொதிக்கும் அரசியல் களம்

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "சிறுபான்மை மக்களை குறிவைத்து அச்சுறுத்தும் போக்கு தொடர்வதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது; உடனடியாக இந்த பதிவுகளை ரத்து செய்ய வேண்டும்" என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Advertisement

    குற்றங்களைக் கட்டுப்படுத்துவதும் புலனாய்வை நவீனப்படுத்துவதும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அது சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டும், மனித உரிமைகளை மதித்தும் மட்டுமே நடக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஊரையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தையோ சந்தேகப் பார்வையில் நிறுத்தும் காவல் துறையின் இந்த கண்மூடித்தனமான நடவடிக்கையை தவெக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. மக்களிடம் அச்சத்தை போக்கி, இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க முதல்வர் தலைமையிலான அரசு உடனடியாக தலையிட்டு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    English Summary

    Melapalayam Biometrics Row: Why Is Police Profiling Sparking Outrage Under the TVK Govt?