திமுக காணாம போச்சு.. விஜய் ஜெயிச்சா தமிழ்நாட்டுக்கே அவப் பெயர் வந்துரும்! நயினார் நாகேந்திரன் வேதனை!

  • நெல்லை: திமுக என்ற கட்சியே இப்போது இருக்கிறதா? இல்லையா? என்பதே தெரியவில்லை எனவும், விசிக தலைவர் திருமாவளவன் வந்த காரில் 'சிஎம் 2031' என பொறிக்கப்பட்டுள்ளதை வெறும் நம்பர் பிளேட் ஆக மட்டும்தான் நான் பார்க்கிறேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் தேவையற்றது.. இந்த தேர்தலில் மாற்றம் வரவில்லை என்றால் நடிகர் நடிகைகள் பின்னால் சென்றவர்கள் தமிழக மக்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாகும் நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பிரதமர் நரேந்திர மோடியின் 76வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பாஜக சார்பில் சேவை மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏழை எளிய மக்களுக்கும் பள்ளி அங்கன்வாடி குழந்தைகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    அந்த வகையில், நெல்லை பெருமாள்புரம் மாநகராட்சி பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ், நோட்டு புத்தகம், பேனா பென்சில் போன்றவை பாஜக சார்பில் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தினை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    நயினார் நாகேந்திரன்

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றி கழகம் விலை கொடுத்து வாங்கியுள்ளது. இடைத்தேர்தலில் அதிகமான பணம் செலவழிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தின் இடைத்தேர்தல் தேவையற்றது. தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு நிலவி வருகிறது. துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து அரசு சொல்லி வருகிறது. 3,000 மெகாவாட் வரக்கூடிய இடத்தில் 10 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வருவதாக அமைச்சர் ஒருவர் சொல்கிறார்.

    Advertisement

    தமிழக இடைத்தேர்தல்

    இடைத்தேர்தலில் மாற்றம் வர வேண்டும். வந்தால்தான் நன்றாக இருக்கும். இல்லையென்றால் தமிழக மக்கள் நடிகர், நடிகைகள் பின்னால் சென்றார்கள் என்று அவப்பெயருக்கு ஆளாகும் நிலை உருவாகும். தமிழக சட்டமன்றம் மோசமான சூழலுக்கு சென்று விட்டது. பால் விலை உயர்வு ஏற்பட்டுவிட்டது. கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுப்பது நிறுத்தப்பட்டு விட்டது. பால் தட்டுப்பாடு ஏற்பட்டால் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும். மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    விஜய் அரசு

    தட்டுப்பாடு இல்லாமல் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. மதச்சார்பற்ற கட்சி, மதச்சார்பற்ற ஆட்சி என தமிழக வெற்றி கழகம் சொல்லி வருகிறது. சபாநாயகர் முதல் முதலமைச்சர் வரை ஒரு தலைப்பட்சமாக பேசி வருகின்றனர். மதச்சார்பற்ற ஆட்சி என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. 26 மற்றும் 27ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்களை நான் தான் நியமனம் செய்ய முடியும். கூட்டணியில் உள்ள நட்சத்திரப் பேச்சாளர்களை நான் நியமனம் செய்ய முடியாது.

    Advertisement

    புதிய சட்டமன்றம்

    அப்படி கூட்டணியில் உள்ளவர்களை நியமித்தால், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? மற்ற கட்சித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என கையசைவின் மூலம் செய்து பதில் அளித்தார். நாங்கள் யாருக்கும் பின்னணியில் இல்லை. திமுக கட்சி இருக்கிறதா என்ற நிலை உருவாகியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் அவரும் இருக்கிறார், அவரும் இருப்பதால் புதிய சட்டமன்றம் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் உள்ள இடத்தின் அளவு எவ்வளவு என்பதே தெரியாமல், அதிகாரி, பொறியாளர் என யார் என்றே தெரியாமல் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர்.

    Advertisement

    திருமாவளவன்

    மத்தியில் மூன்றாவது அணி அமைக்கப் போவதாக சொல்லும் கட்சியின் இன்றைய நிலைமையையும், அப்போது இருந்த நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். திமுக இப்போது இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. 'சி.எம். 2031' என்ற நம்பர் பிளேட் கொண்ட காரில் திருமாவளவன் வந்தது பேசுபொருளாகி உள்ளது. அந்தக் காரில் உள்ளதை நம்பர் பிளேட்டாக மட்டுமே பார்க்கிறேன்" என தெரிவித்தார்.

    English Summary

    BJP leader Nainar Nagendran questions DMK’s current presence and criticises TVK while discussing Tamil Nadu bypolls and governance issues.