திருநெல்வேலி: நெல்லை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் பிடியில் இருப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த மரணத்துக்கு முதல்வர் விஜய் தலைமையிலான அரசே பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கீழ முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (27). இவர் மீது 4 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன.
கடந்த 10-ம் தேதி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே பைக் விபத்தில் காலில் பலத்த காயமடைந்திருந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைதிகளுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 14-ம் தேதி மருத்துவமனை வார்டில் உள்ள பாத்ரூமுக்கு சென்ற சங்கரலிங்கம், அங்கிருந்த ஜன்னல் கம்பியில் தனது லுங்கியால் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். ஆனால், காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தவர் எப்படி தூக்கிட்டு உயிரிழந்தார் என்று கேள்வி எழுப்பிய உறவினர்கள், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. வார்டு கழிப்பறையில் லுங்கியால் தூக்கிட்டு இறந்துவிட்டாராம்.. இந்த தகவலறிந்ததுமே, சங்கரலிங்கத்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.. உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் எழுப்பியதால், போஸ்ட் மார்ட்டம் நடைமுறைகளும் தாமதமாகியுள்ளன. எக்ஸ்ரே எடுப்பதற்காக உடல் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், கைதி சங்கரலிங்கத்தின் மரணத்துக்கு தவெக அரசே பொறுப்பு என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: "நெல்லை அரசு மருத்துவமனையில் போலீஸ் கண்காணிப்பில் இருந்த கைதியின் உயிரிழப்புக்கு ஜோசப் விஜய் அரசே பொறுப்பு! திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முன்னீர்பள்ளத்தை சேர்ந்த சங்கரலிங்கம் என்ற கைதி, காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தபோதே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. முழுமையான போலீஸ் பிடியில் இருக்கும்போதே இந்த மரணம் நிகழ்ந்திருப்பது, பொதுமக்களிடையேயும் உயிரிழந்தவரின் உறவினர்களிடையேயும் கடுமையான சந்தேகங்களையும் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரு நபர் முழுமையான போலீஸ் கண்காணிப்பில் இருக்கும்போது, அவர் கழிப்பறைக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டார் என்ற காவல்துறையின் கூற்று பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. காவல்துறையின் 24 மணி நேரப் பாதுகாப்பில் இருந்த ஒருவரைக் கண்காணிக்கத் தவறியது ஏன்? பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களின் கடுமையான மெத்தனப் போக்கா அல்லது இந்த மர்ம மரணத்திற்குப் பின் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கேள்விகள் எழுகின்றன. முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் காவல்துறையின் பிடியில் இருக்கும் நபர்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதையே காட்டுகிறது. எனவே, சங்கரலிங்கத்தின் மரணம் குறித்து முறையான மற்றும் வெளிப்படையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்; பணியில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான துறைசார் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கத் தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். சங்கரலிங்கத்தின் மரணம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடக்கிறது என்றாலும், போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த கைதி, விபத்துக் காயத்தின் வலி தாங்காமல் உயிரை மாய்த்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பதும் தெரியவில்லை.. இந்த கொலை குறித்து அரசியல் தலைவர்களும் கேள்வி எழுப்ப தொடங்கியிருப்பது தவெக அரசுக்கு தலைவலியை தந்து வருகிறது..!!திருநெல்வேலி அரசு மருத்துவமனை
நயினார் நாகேந்திரன் கண்டனம்
நயினார் நாகேந்திரன்
பாதுகாக்க தவறியது ஏன்
அரசியல் தலைவர்கள்