நெல்லை: நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி 10 மாதங்களுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்பத்திரிகையில் இரண்டாவதாக இவரது பெயர் இடம்பெற்ற நிலையில் சிபிசிஐடி காவல்துறை அவரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமாரி அழுதுகொண்டே சென்றார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி நெல்லை கே.டி.சி. நகரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணை பார்க்க வந்த நிலையில் அந்தப் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் அவரை வெட்டி படுகொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
அதன் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து சுர்ஜித் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக உதவி ஆய்வாளரும் சுர்ஜித்தின் தந்தையுமான சரவணன் கைது செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரது உறவினர் ஜெயபாலும் கைது செய்யப்பட்டார். கவின் கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரியை சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று கைது செய்தனர். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில் சுர்ஜித் தாய் கிருஷ்ணகுமாரி தற்போது கைதாகி உள்ளார். போலீஸ் எஸ்.ஐயான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நெல்லை 2வது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையிலும், குற்றப்பத்திரிகையில் சுர்ஜித்தின் தாயான எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலும், சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.