நெல்லை ரயில் நிலையத்தில் இனி சிக்னல் தாமதம் இல்லை! ஒரே நேரத்தில் பல ரயில்களை இயக்க புதிய வசதி

  • திருநெல்வேலி: நெல்லை ரயில் நிலையத்தில் சிக்னல் தாமதத்தைக் குறைப்பதற்காகத் தெற்கு ரயில்வே புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாள விரிவாக்கம் மற்றும் புதிய சிக்னல் அமைப்புகளின் மூலம் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் பல பாதைகளில் ரயில்களை இயக்க முடியும்.. பயண நேரத்தையும் சேமிக்க முடியும்... அந்தவகையில் ரயில்வே ஏற்படுத்தி தந்துள்ள புது டெக்னிக்கல் வசதி என்னென்ன தெரியுமா?

    Advertisement

    நெல்லை ரயில் நிலையத்தை பொறுத்தரை, மிக முக்கியமான ரயில்வே ஜங்ஷனாக விளங்கி கொண்டிருக்கிறது... இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.. பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ரயில்களும் வந்து செல்கின்றன..

    Advertisement

    நெல்லை ரயில்வே நிலையம்

    இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக நெல்லை சந்திப்பு இருந்தாலும், சிக்னல் தாமத பிரச்சனை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.. சிக்னல் கிடைக்காததால், அதிக நேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலைமையும் நீடித்து வருகிறது, இந்த பிரச்சனைக்குத்தான் இப்போது ரயில்வே நிர்வாகம் சூப்பரான நடவடிக்கையை எடுத்துள்ளது..

    அதாவது இனிமேல் நெல்லைக்கு வரும் எந்த ரயிலாக இருந்தாலும், சிக்னலுக்காக நிலையத்திற்கு வெளியே மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரே நேரத்தில் அனைத்து திசைகளில் இருந்தும் வரும் ரயில்களையும், ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்களையும் தடையின்றி இயக்கும் அதிநவீன டெக்னாலஜியை ரயில்வே பொறியாளர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறார்கள்.

    Advertisement

    ரயில்வே சீரமைப்பு பணிகள்

    பல வருட காலமாகவே இந்த சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன.. அதாவது கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் வாஞ்சி மணியாச்சியில் இருந்து நாகர்கோவில் வரையிலான பாதையை இரட்டை அகலப்பாதையாக மாற்றும் பணிகள் ஆரம்பமாகின.. கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டன.

    இருந்தாலும், நெல்லை ரயில் நிலைய எல்லைக்குள் இரட்டை அகலப்பாதையை இணைக்கும் பணிகள் முழுமை பெறாமல் நிலுவையில் இருந்துவந்தன. இதற்குதான் கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நெல்லை ரயில் நிலைய வளாகத்தில் தண்டவாள சீரமைப்பு மற்றும் தொழில்நுட்ப மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

    Advertisement

    இந்த சீரமைப்புப் பணிகள் இப்போது மொத்தமாக முடிந்துவிட்டன.. இதையடுத்து, நெல்லை ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பு முழுவதுமாக புதிய பரிமாணத்தை பெற்றுள்ளது.

    திருநெல்வேலி - நவீன மாற்றங்கள்

    இதுவரை நெல்லை ரயில் நிலையத்திற்குள் நுழையும் ரயில்கள் வெறும் 15 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே மெதுவாக வர முடிந்தது. ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள நவீன மாற்றங்களால், இந்த வேகம் மணிக்கு 60 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேபோல, நெல்லையிலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் பாதையில் 15 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட ரயில்கள், தற்போது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் வகையில் தண்டவாளங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.. இதற்காக கூடுதலாக 600 மீட்டர் நீளத்திற்கு ஒரு புதிய இணை ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இனி சிக்னல் தேவையில்லை

    பயணிகளின் வசதிக்காகவும் கூடுதல் பெட்டிகளை இணைப்பதற்காகவும் பிளாட்பாரத்தின் நீளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1, 2 மற்றும் 3-வது பிளாட்பாரப் பகுதியில் முன்பு 686 மீட்டராக இருந்த தண்டவாளங்களின் நீளம் முறையே 730 மீட்டர், 716 மீட்டர் மற்றும் 729 மீட்டராக விரிவாக்கப்பட்டுள்ளன.

    அதேபோல 5-வது தண்டவாளம் 791 மீட்டராகவும், 6 மற்றும் 8-வது தண்டவாளங்கள் 815 மீட்டர் நீளமாகவும் மாற்றப்பட்டுள்ளன. 4 மற்றும் 5-வது பிளாட்பாரங்கள் 625 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.

    இவ்வளவு பெரிய மாற்றத்தின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? வேறு வேறு வழிகளில் இருந்து வரும் ரயில்கள் ஒரே நேரத்தில் வந்து செல்லும் வசதிதான்...

    Advertisement

    ஒரே நேரத்தில் வந்து நிற்கும் ரயில்கள்

    தென்காசியில் இருந்து நெல்லை வரும் ரயில்கள் அனைத்தும் 9-வது தண்டவாளம் வழியாக ஒரே நேரத்தில் புறப்படவும் வந்து சேரவும் முடியும். இதனால், தென்காசி மற்றும் திருச்செந்தூர் ஆகிய 2 வேறு பாதைகளில் இருந்து ஒரே நேரத்தில் ரயில்கள் நிலையத்திற்குள் நுழைந்தாலும், நாகர்கோவிலில் இருந்து இயங்கும் ரயில்களின் போக்குவரத்திற்கு எந்தவித பாதிப்பும் இடையூறும் ஏற்படாது.

    அதுமட்டுமல்ல, நெல்லை - மேலப்பாளையம் இடையே அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதி சிக்னல் அமைப்போடு நேரடியாக இணைக்கப்பட்டு, 1-வது ரயில்வே கேட் தானியங்கி கேட்டாக மாற்றப்பட்டுள்ளது. நெல்லை - தென்காசி, நெல்லை - மேலப்பாளையம், நெல்லை - திருச்செந்தூர் மற்றும் நெல்லை - மதுரை ஆகிய 4 முக்கிய ரயில் பாதைகளில் சுமார் 108 புதிய சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன.

    ரயில்வே நிர்வாகத்தின் இந்த சூப்பரான திட்டமிடலால், தென் மாவட்ட பயணிகளின் பயண நேரம் பெருமளவில் மிச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.. இது பயணிகளுக்கும் குஷியை தந்து வருகிறது...!!

    English Summary

    Nellai Railway Station Ends Signal Delays! New Technology to Run Multiple Trains Simultaneously