எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க பாத்தியா? எகிறும் ரேட்..கசக்குது சீனி! நெல்லை அல்வா விலை எவ்வளவு?

  • திருநெல்வேலி: சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், திருநெல்வேலியின் பிரபலமான அல்வாவின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் சிரமப்பட்டு வரும் பொதுமக்களுக்கு, சர்க்கரை விலையும் கூடுதல் சுமையாக மாறியுள்ளது. இதனால் நெல்லையின் பாரம்பரிய இனிப்பான அல்வாவின் விலையும் 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது மட்டுமல்லாமல் டீ, காபி ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

    Advertisement

    தமிழர்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் சீனி எனப்படும் சர்க்கரைக்கு முக்கிய இடம் உண்டு. காலையில் குடிக்கும் காபி, டீ தொடங்கி குழந்தைகளுக்கான பலகாரங்கள், இனிப்புகள் என பல்வேறு உணவுப் பொருட்களில் சர்க்கரை தவிர்க்க முடியாத மூலப்பொருளாக உள்ளது.

    Advertisement

    இதனால் சர்க்கரையின் விலை உயரும்போது அதன் தாக்கம் நேரடியாக பொதுமக்களின் பட்ஜெட்டிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சீனியின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    சர்க்கரை விலை உயர்வு

    இதற்கு முன்பு ஒரு கிலோ சர்க்கரை ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது பல இடங்களில் ரூ.60 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்பட்டது. அதாவது, ஒரு கிலோவுக்கு சுமார் 50 சதவீதம் வரை விலை அதிகரித்தது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சீனி விலையில் ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் 100 ரூபாய் வரை கூட உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    விலை உயர்வு

    இதனால் பொதுமக்கள் தற்போது நேரடியாக பாதிக்கப்பட தொடங்கியுள்ளனர். சர்க்கரை விலை உயர்வால் முதலில் பாதிக்கப்படுவது இனிப்பு மற்றும் பேக்கரி தொழில்தான். ஸ்வீட்ஸ் கடைகள், பேக்கரிகள், ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள், குளிர்பான தயாரிப்பாளர்கள் என பல்வேறு தொழில்கள் சர்க்கரையை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. அடுத்தடுத்த மாதங்களில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் வர உள்ளன.

    உற்பத்திச் செலவு

    பண்டிகை காலங்களில் இனிப்புகளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், சர்க்கரையின் பயன்பாடும் அதிகரிக்கும். இந்த நிலையில் சர்க்கரை விலை உயர்ந்திருப்பது இனிப்பு தயாரிப்பாளர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. விலையை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் வாங்குவதை குறைப்பார்கள். அதே நேரத்தில் விலையை உயர்த்தாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்தால் உற்பத்திச் செலவு அதிகரித்து லாபம் குறையும். இதனால் சிறிய அளவில் இனிப்பு கடைகள் நடத்தி வருபவர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

    Advertisement

    நெல்லை அல்வா

    இந்த விலை உயர்வின் தாக்கம் திருநெல்வேலியின் புகழ்பெற்ற அல்வாவையும் விட்டுவைக்கவில்லை. திருநெல்வேலி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நெல்லை அல்வாதான். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து நெல்லைக்கு வருபவர்களும் அல்வாவை வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நெல்லை அல்வாவின் முக்கிய மூலப்பொருட்களில் கோதுமை மாவுடன் சர்க்கரையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இருட்டுக்கடை அல்வா

    அல்வா தயாரிப்பில் அதிக அளவு சர்க்கரை பயன்படுத்தப்படுவதால், சர்க்கரையின் விலை உயர்வு நேரடியாக அல்வா தயாரிப்பு செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள பல பிரபல அல்வா மற்றும் இனிப்பு கடைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இருட்டுக்கடை அல்வாவுக்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    விலை உயர்வு

    தற்போது ஒரு கிலோ அல்வா ரூ.440-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சீனி விலை உயர்வை தொடர்ந்து ரூ.40 வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, விலை உயர்வு அமலுக்கு வந்தால் ஒரு கிலோ அல்வா ரூ.480-க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரூ.40 வரை விலை

    இருட்டுக்கடை மட்டுமின்றி நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல இனிப்பு கடைகளிலும் அல்வாவின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சில கடைகளில் ஒரு கிலோ அல்வாவுக்கு ரூ.20 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சில கடைகளில் ரூ.30 முதல் ரூ.40 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக அல்வா வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    English Summary

    Rising sugar prices have increased Tirunelveli halwa prices, with popular shops reportedly raising rates by ₹20 to ₹40 per kilogram.