திருநெல்வேலி: திருநெல்வெலியில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்த அந்த தம்பதிக்கு, கயத்தாறு அருகே பஸ் நின்றவரை எதுவுமே சந்தேகமாக தெரியவில்லை. இரவு சாப்பிட்டுவிட்டு மறுபடியும் பேருந்துக்கு திரும்பியபோதுதான் பெரிய அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது... யார் அந்த இளைஞர்? என்ன நடந்தது கயத்தாறு அருகே?
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா, தனியார் காலேஜில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2 பேரும் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் புறப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கரிசல்குளம் விளக்குப் பகுதியில் பஸ் சென்றபோது, சாலையோர ஓட்டலில் இரவு உணவுக்காக நிறுத்தப்பட்டது.. அப்போது ஜஸ்டின் சகாயராஜும், ஜூலியட் லதாவும் பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி சாப்பிட சென்றார்கள்.. சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் பஸ்ஸுக்கு வந்த ஜூலியட் லதா, தன்னுடைய பர்ஸை பார்த்துள்ளார். அதில் வைத்திருந்த தங்க நகைகள் காணாமல் போயிருந்தன. மொத்தம் 40.08 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. உடனே பதறியடித்து, அவர் உட்கார்ந்திருந்த சீட் பகுதியில் தேடினார்கள்.. நகை எதுவும் கிடைக்கவில்லை.. பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களுக்கும் இந்த திருட்டு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.. மேலும் பஸ் நிறுத்தப்பட்டிருந்த ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்., அத்துடன் அந்த பகுதியில் பதிவாகியிருந்த செல்போன் அழைப்புகளின் விவரங்களையும் போலீஸார் ஆராய்ந்தனர். அப்போதுதான் இந்த திருட்டின் பின்னணியில் இருந்தவர்கள் பற்றிய முக்கிய துப்பு போலீஸாருக்கு கிடைத்தது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் மத்தியப் பிரதேசத்துக்கே சென்று விசாரணையை ஆரம்பித்தனர்.. அங்கு உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் சிசிடிவி காட்சிகளை காண்பித்து விசாரித்தபோது, காட்சிகளில் பதிவாகியிருந்த நபர் தார் மாவட்டம் மணவால் தாலுகா கேர்வா கிராமத்தைச் சேர்ந்த மக்சூத்கான் என்பது தெரியவந்தது. இதையடுத்து மத்தியப் பிரதேச போலீஸார், நம் தனிப்படை போலீஸாரை மக்சூத்கான் வசிக்கும் கிராமத்துக்கு அழைத்து சென்றார்கள்.. அங்கே தூத்துக்குடி போலீஸாரை பார்த்ததுமே மக்சூத்கானுக்கு தூக்கி வாரிப்போட்டது.. உடனே அங்கிருந்து பைக்கில் வேகமாக தப்பிச்செல்ல முயன்றார்... ஆனால் போலீஸார் அவரை விடவில்லை. சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். பிறகு கேர்வா புறக்காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்தவர்களிடம் நகைகளை திருடியதை மக்சூத்கான் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து கயத்தாறில் திருடப்பட்ட 40.08 சவரன் தங்க நகைகளும் மீட்கப்பட்டன. அதுமட்டுமல்ல, மக்சூத்கானை பிடித்த பிறகுதான், போலீஸாருக்கு இன்னொரு பெரிய விஷயம் தெரியவந்தது. இப்படி ஆம்னி பஸ்ஸில் திருடுவது, திடீரென நடந்தது கிடையாது.. . மக்சூத்கானும் அவரது நண்பர்களான ரபீக், முகைதீன் ஆகியோருக்கு, முழு நேர வேலையே திருட்டுதான்.. இதற்காகவே, மத்தியப் பிரதேசத்தில் இருந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்து செல்வார்களாம். சாரதாரண பஸ்ஸில் செல்பவர்களைவிட, ஆம்னி பஸ்களையே குறி வைத்துள்ளனர்.. குறிப்பாக, சென்னையில் இருந்து நெல்லை வரை செல்லும் ஆம்னி பஸ்களில், உணவுக்காக பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்படுகின்றன என்பதை கவனித்து, அந்த நேரத்தை பயன்படுத்தி, ஷெட்யூல் போட்டு திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதேபோல இவர்களின் திருடும் முறையும் வித்தியாசமானது.. சாப்பிடுவதற்காக பஸ்கள் நிறுத்தப்பட்டதுமே, பயணிகள் அனைவரும் கீழே இறங்குவார்கள்... அந்த நேரத்தில் 3 பேரில் ஒருவர் பஸ்ஸின் முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டு வெளியே யாராவது வருகிறார்களா, போகிறார்களா என்பதை கண்காணிப்பார். மற்ற 2 பேரும் பஸ்ஸுக்குள், பயணிகள் சீட்டுகளில் வைத்திருக்கும் கைப்பைகள் மற்றும் ஜிப் பைகளை திறந்து பார்ப்பார்கள். அதில் நகைகள் அல்லது பணம் இருந்தால், அவற்றை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியேறுவார்கள்... குறிப்பாக பெண்கள் வைத்திருக்கும் பர்ஸ்களையே இந்த கும்பல் அதிகமாக குறிவைத்துள்ளது.. இதனால் ஆம்னி பஸ்களில், பெண்கள் சீட்டு பகுதிலேயே இவர்கள் அதிகமாக நோட்டமிட்டு வருகிறார்களாம். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் பல இடங்களில் திருடியிருக்கிறார்கள்.. இதில் கயத்தாறும் சேர்த்து 173 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கயத்தாறில் நடந்த 40.08 சவரன் திருட்டை விசாரிக்க பேனால், பல மாவட்டங்களில் ஆம்னி பஸ்களின் திருட்டுகள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன.. கயத்தாறில் திருடிய பிறகுதான் மக்சூத்கான் மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் மத்தியப் பிரதேசத்துக்கு கிளம்பி சென்றிருக்கிறார்கள்.. இப்போதைக்கு மக்சூத்கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற நண்பர்கள், ரபீக் மற்றும் முகைதீனை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு
திருநெல்வேலி ஆம்னி பஸ்
3 பேர் சிக்கினார்கள்
வினோத திருட்டு
சென்னை டூ நெல்லை பஸ்
173 சவரன் கொள்ளை