எங்கப்பாவும் மிசாவால் பாதிக்கப்பட்டார்.. ஸ்டாலினும் பாதிக்கப்பட்டார்! போட்டுடைத்த அமைச்சர் வன்னியரசு

  • திருநெல்வேலி: திமுகவின் துரோகம், ஓரங்கட்டல் குறித்து பேசத் தயார். வாக்கு எங்களிடம்.. அதிகாரம் மட்டும் உங்களுக்கா? எனவும், திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விசிகவின் வன்னியரசு அதிரடியாகக் கூறியுள்ளார். மேலும், மிசா சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரான சட்டம். அன்றைய காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பலரும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

    Advertisement

    திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர்," விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இலக்கு என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இல்லாத இந்தியாவையும், சனாதனம் ஒழிந்த சமத்துவ இந்தியாவையும் உருவாக்குவதே.

    Advertisement

    ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை வீழ்த்துவது முடியாத காரியம் என தாங்கள் கருதவில்லை. அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கொள்கைகள் தங்களது மிகப்பெரிய ஆயுதம். தமிழ்நாட்டில் பாஜக காலூன்றக் கூடாது என்பதே தங்களது முக்கிய இலக்குகளில் ஒன்று

    வன்னியரசு

    விடுதலை சிறுத்தைகளின் அரசியல் முன்னெடுப்புகளின் காரணமாகவே தமிழகத்தில் பாஜக ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விவகாரங்களை பயன்படுத்தி மத ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வன்முறையைத் தூண்டும் முயற்சிகள் நடைபெற்றாலும், விடுதலை சிறுத்தைகள் இருக்கும் வரை அவை நடைபெறா. தங்களது கொள்கை மற்றும் அரசியல் செயல்பாடுகளை நன்கு அறிந்துதான் தமிழக வெற்றி கழகம் தங்களை கூட்டணிக்கு அழைத்துள்ளது.

    Advertisement

    விசிக

    காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் கட்சிகள் ஒரே இடத்திற்கு நகரும் சூழல் உருவாகும். தற்போது அதற்கான காலச்சூழல் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இடதுசாரிகளும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது.
    இடதுசாரிகளின் கொள்கையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையும் பல்வேறு அம்சங்களில் ஒன்றாக இருப்பதால், அவர்கள் இந்த அணியில் இணைந்தால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளும் வலிமை மேலும் அதிகரிக்கும்.

    திமுக

    திமுகவுடன் கடந்த காலங்களில் எந்த இலக்கை முன்வைத்து செயல்பட்டோமோ, அதே இலக்கை அடிப்படையாகக் கொண்டுதான் தற்போதும் செயல்பட்டு வருகிறோம். அதேநேரத்தில் திமுகவுடன் பயணித்த காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு வலிகளும் ஆதங்கங்களும் இருப்பதாகவும், கூட்டணி நலன் கருதி அவற்றை வெளிப்படையாக பேசாமல் இருந்தது. திமுக தங்களை எத்தனை முறை அவமானப்படுத்தினாலும், அவதூறுகள் பரப்பப்பட்டாலும், கூட்டணி நலன் கருதி அதை ஏற்றுக்கொண்டு பயணித்தோம்.

    Advertisement

    ஆட்சியில் பங்கு

    2016ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தது. 6 தொகுதிகளில் போட்டியிட்டு4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தங்களுக்கு ஏன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படவில்லை. எங்களுடைய வாக்கு உங்களுக்கு வேண்டும்; உங்கள் வாக்கு எங்களுக்கு வேண்டும். வாக்கு பரிமாற்றம் இருக்கும்போது அதிகாரப் பகிர்வு மட்டும் ஏன் இருக்கக்கூடாது?

    வேங்கைவயல் விவகாரம்

    வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம்சாட்டுவது எவ்வாறு சரியாக இருக்கும் என்ற கேள்வியை திமுகவிடம் தாங்கள் முன்வைத்தோம். சாதிய வன்கொடுமைகள் மற்றும் ஆணவப் படுகொலைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது. ஆனால் அந்த விவகாரங்களில் திமுக சார்பில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தங்களது வற்புறுத்தலின் அடிப்படையில்தான் கே.என். பாட்ஷா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

    Advertisement

    துரோகங்கள்

    திமுகவால் தங்களுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் துரோகங்கள் மற்றும் ஓரங்கட்டல்கள் குறித்து நீண்ட பட்டியலாக பேச முடியும். அவை குறித்து பேசுவதற்கும் தான் தயாராக இருக்கிறேன். இவை அனைத்தும் கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு ஏற்பட்ட திடீர் கோபம் அல்ல என்றும், பல காலமாக தங்களுக்குள் இருந்து வந்த வலியும் ஆதங்கமும் தான். விடுதலை சிறுத்தைகள் கட்சி திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளை ஒருபோதும் எதிர்க்கவில்லை.

    மிசா சட்டம்

    அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளிலும் இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மிசா சட்டத்தின் கீழ் தனது தந்தையும் பாதிக்கப்பட்டார். மிசா சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரான சட்டம். அன்றைய காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பலரும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

    English Summary

    Vanniyarasu says his father and Stalin were among those affected by MISA, while criticising DMK and AIADMK over power sharing.