நெல்லை: நெல்லையில் தவெக அரசை விமர்சித்தும், சமூக பிரச்சனைகள் குறித்தும் வீடியோ பதிவிட்டு வந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொலையில் திடீர் ட்விஸ்ட்டாக அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வனோபி (34). இவர் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமூக பிரச்சனைகள் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். தவெக அரசை விமர்சித்தும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் உள்ள அறை ஒன்றில் வனோபி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வனோபியின் கணவர் வீட்டில் இல்லாதபோது அவர் கொல்லப்பட்டு கிடந்ததாக கூறப்பட்டது. மேலும், 4 வயது குழந்தையையும் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து கணவர் அருணாசலம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வனோபி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வனோபி கொலையில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கணவன் அருணாச்சலமே மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, 4 வயது குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்தது. குடும்பத் தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. மனைவியை கொன்ற குற்றவாளி அருணாசலத்தை போலீசார் கைது செய்ததுடன், குழந்தையையும் பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.