நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலில் உறவினரை தாக்கி, தடுக்க வந்த மற்றொருவரின் விரலை கடித்து துப்பிய இளைஞர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் செக்கடி தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் சங்கர். இவரது அத்தை மகன் கார்த்திக் அதே பகுதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனிடையே கார்த்திக் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனை அக்கம் பக்கத்தினர் மற்றும் ஹரிஷ் சங்கரின் தம்பி ரகுராம் பார்த்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், ரகுராமை செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ஹரிஷ் சங்கர் மற்றும் ரகுராமுடன் தகராறு செய்துள்ளார் கார்த்திக். அப்போது அவர்களது பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஹரிஷ் சங்கரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனைத் தடுக்க வந்த ரகுராமையும் சரமாரியாக தாக்கிய கார்த்திக், அவரது விரலை கடித்து துப்பியுள்ளார். இதில் ரகுராமுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.