திருவள்ளுர்: கும்மிடிப்பூண்டி அருகே ரசாயன பவுடர் இருந்த பெட்டிகளை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், 3 பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து மருந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை ரசாயன பவுடர், கண்டெய்னர் லாரி மூலம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. வழியில் சில பெட்டிகள் சேதமடைந்ததால், எளாவூர் சோதனைச் சாவடியில் லாரி நிறுத்தப்பட்டது.
லீக்கேஜ் ஆன ரசாயன பெட்டிகளை மற்றொரு லாரிக்கு மாற்றுவதற்காக, சுண்ணாம்புகுளம் அடுத்த கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 7 கூலித் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். ரசாயன பவுடரை மாற்றி ஏற்றும் பணியை முடித்துவிட்டு அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். வீடுகளுக்குச் சென்ற பிறகு, ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு மயக்கம் மற்றும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 7 பேரும் உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுயநினைவை இழந்த சந்தோஷ் (29), ஷியாம் (27), கோபி (40) ஆகிய மூன்று பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சந்தோஷ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஆரம்பாக்கம் காவல்துறையினர் விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சந்தோஷ் காதல் திருமணம் செய்தவர் என்றும், அவருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளதாகவும் கூறப்படுகிறது.