இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

  • திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி புதரில் வீசப்பட்ட கொடூர சம்பவத்தில், குழந்தையிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    சிப்காட் சுற்றுப்பகுதிகளில் பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்துவாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை செய்து வருகின்றனர். சிப்காட் பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் குடியிருப்பில் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொதுமக்கள் உதவியுடன் தேடினர்.

    அப்போது இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்கள் சிலர் முட்புதரில் பச்சிளம் குழந்தை காயங்களுடன் உடல்நலம் குன்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அருகில் வசித்து வந்த இளைஞர் பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    சிறுமியிடம் வடமாநில இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட குழந்தையை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முட்புதரிலிருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் கொடூர செயலில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    சிறுமியை ஒரே அறையில் இருந்த வட மாநில இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி 19 என்ற குற்றவாளியை கைது செய்துள்ளதாக கூறினர்.

    தங்களது வீடுகளிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளதாகவும், காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவதாகவும், தங்களது குழந்தைகளுக்கும் உரிய முறையில் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பொதுமக்களை சமரசம் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பெண்கள் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சிங்கப்பெண்கள் சிறப்பு படை அமைக்கப்பட்டது. ஆனாலும் தவெக ஆட்சியிலும் இதேபோல சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள், குற்றங்களை தடுக்க தமிழக அரசு கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English Summary

    Three-year-old assault victim from Gummidipoondi dies despite treatment; accused arrested, investigation intensifies.