குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்!

  • திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது குழந்தை திடீரென மாயமானதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையே, வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள முட்புதர் பகுதியில் குழந்தை மயக்க நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.

    குழந்தையை மீட்ட பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    இந்த சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் சேகரித்தனர். விசாரணையின் அடிப்படையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சி (19) என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் புலம்பெயர் தொழிலாளியாக அப்பகுதியில் உள்ள சிப்காட்டில் பணியாற்றி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேநேரத்தில், குழந்தையை நான்கு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா, வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தைக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே சம்பவத்தின் முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    English Summary

    Three-year-old girl found unconscious in Gummidipoondi; police arrest suspect and probe allegations of sexual assault.