திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், திருநங்கையை உயிருக்கு உயிராக நேசித்து, அவரையே திருமணம் செய்துள்ளார் ஒரு ஐடி ஊழியர்.. திராவிடர் கழக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சென்னியப்பன் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில், மாலை மாற்றி, இருவருமே சுயமரியாதை பதிவுத்திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோரின் தடைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி திருநங்கையை கரம் பிடித்த இளைஞரின் இச்செயல் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ்.. இவருக்கு 30 வயதாகிறது.. சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் ஐடி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வருகூராம்பட்டியைச் சேர்ந்த 28 வயதான கயல்விழி என்ற திருநங்கைக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.. சோஷியல் மிடியாவில் இருவரும் அறிமுகமாகி பழகி வந்துள்ளனர்.. இது 7 வருட காதலாகும். பாலின தடைகளை தாண்டி இருவரும் ஒருவரையொருவர் உயிருக்குயிராக காதலித்து வந்தனர். இந்த காதல், பிரவீன் ராஜ் வீட்டிற்கு தெரியவந்ததுமே பயங்கரமாக அதிர்ச்சி அடைந்தனர். இந்த காதலையும் கடுமையாக எதிர்த்தனர். ஒரு திருநங்கையைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று ஏகப்பட்ட அட்வைஸ்கள், ஏகப்பட்ட வார்னிங்குகளை விடுத்தனர்.. ஆனாலும் பிரவீன்ராஜ் தனது காதலில் உறுதியாக இருந்தார். அத்துடன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, இருவரும் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு, இருவரும் தங்களது பணிகளை தொடர சென்றனர். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இவர்கள் 2 பேரையும் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.. இதற்காக சென்னையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் பிரவீன்ராஜை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக சேர்த்தனர். சில மாதங்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரவீன்ராஜ், வெளி உலகத்துடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். பிறகு கடந்த மே மாதம் பிரவீன்ராஜை போதை மறுவாழ்வு மையத்திலிருந்து அழைத்து வந்த பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க, அவசரமான ஏற்பாடுகளை செய்தார்கள்.. இந்த விஷயம் தெரிந்த பிரவீன்ராஜ், இதற்கு மேல் வீட்டில் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தார்.. அதற்காக காதலி கயல்விழியை தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினார். பெற்றோரின் கட்டாய திருமண கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், வீட்டு விட்டு வெளியேறி திருமணம் செய்ய வேண்டும் என்று தன்னுடைய முடிவை சொன்னார்.. கயல்விழியும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.. அதன்படியே, பிரவீன்ராஜும் கயல்விழியும், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இயங்கி வரும் மனித சட்ட உதவி மையத்தில் தஞ்சமடைந்தனர்,. அங்குள்ள அமைப்பின் நிர்வாகிகளிடம் தங்களின் காதல் கதையையும், குடும்பத்தினரால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும் எடுத்து சொல்லி, உதவி செய்யுமாறு கேட்டார்கள்.. இருவரின் உண்மையான அன்பையும் புரிந்துகொண்ட சட்ட உதவி மைய நிர்வாகிகள், அவர்களுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைக்க முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மனித சட்ட உதவி மையத்தின் நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில், பிரவீன்ராஜ் - கயல்விழி ஜோடி மாலை மாற்றி, தாலி கட்டி சுயமரியாதை முறையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள்.. பெற்றோர் போதை மறுவாழ்வு மையத்தில் அடைத்து வைத்த போதிலும், கட்டாயத் திருமண ஏற்பாடுகளை மீறி ஈரோட்டில் ஐ.டி. ஊழியர் திருநங்கையைக் கரம் பிடித்த இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் திருநங்கைகளின் உரிமைகளும் திருமண பந்தமும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டாலும், இன்னும் குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் பழமைவாத சிந்தனைகளால் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டித்தான் உள்ளது... இருந்தாலும் தடைகளை தாண்டி ஓங்கி ஒளிரும் தூய காதல் என்றுமே வெல்லும் தானே???!!!திருநங்கை மீது பொங்கிய காதல்
சட்ட உதவி மையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
தாலி கட்டி சுயமரியாதை திருமணம்
நெகிழ்ச்சி தருணம்