திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே?

  • திருவள்ளூர்: தமிழகத்தில் அடுத்தடுத்து பெண் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறியுள்ள தொடர் பாலியல் கொடூரங்கள் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நாளில் 5 சிறுமிகள் இத்தகைய அத்துமீறல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.. இதெல்லாம் நம் மாநிலத்தின் பாதுகாப்பையே மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளன.. அப்படின்னா பெண்களின் பாதுகாப்புக்காகத் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் படை எங்கே போனது? என்று அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.

    Advertisement

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோரைக் கொண்ட 3 வயது பெண் குழந்தை நேற்று மாலை திடீரென காணாமல் போனது.

    Advertisement

    இதனால் பொதுமக்கள் மற்றும் பெற்றோரின் தீவிர தேடுதலுக்குப் பின் அங்கிருந்த முட்புதர் ஒன்றில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டி 3 வயது குழந்தை

    ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி பணிபுரியும் இப்பகுதியில் அரங்கேறியுள்ள இந்த கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, பீகாரைச் சேர்ந்த 19 வயதான மஞ்சி என்ற இளைஞரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும், இக்கொடூர செயலில் 4 புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தற்போது தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

    Advertisement

    கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட கொடூர சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே நாளில் 5 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து தமிழகத்தையே உலுக்கியெடுத்துள்ளன.

    "சிங்கப் பெண்" சிறப்பு படை

    முதலாவதாக, திருவள்ளூரில் 7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் ஆட்டோ டிரைவரான நந்தகுமார் (25) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், உடனடியாக "சிங்கப் பெண்" சிறப்பு படைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து விரைந்து செயல்பட்ட சிங்கப் பெண் படையினர், ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமாரை மடக்கிப் பிடித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    அதேபோல பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சரவணன் என்பவர் ஆசை வார்த்தை கூறி சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கார் ஓட்டுநர் சரவணனை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    10 வயது சிறுமிக்கு டார்ச்சர்

    இதேபோல், தாம்பரம் அடுத்த படப்பை அருகே 10 வயது சிறுமிக்கு வடமாநில இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    Advertisement

    வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த சிறுமியிடம் அந்த இளைஞர் அத்துமீறியபோது, சுதாரித்துக் கொண்ட சிறுமி பயத்தில் கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், அந்த வடமாநில இளைஞரைப் பிடித்து தர்மஅடி கொடுத்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதபோதகர் தந்த பாலியல் தொல்லை

    இன்னொரு சம்பவமாக, தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே ஆனந்த நகர் தேவாலயத்தில் மதபோதகராகப் பணியாற்றி வந்த அருள்ராஜ் என்பவர், தேவாலயத்திற்கு வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    Advertisement

    இதனால் மனமுடைந்த சிறுமி, தன் தாயிடம் அழுதுகொண்டே விபரத்தைக் கூற, பதறிப்போன குடும்பத்தினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மதபோதகர் அருள்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

    ஒரே நாளில் 5 கொடுமைகள்

    இப்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என ஒரே நாளில் அடுத்தடுத்து 5 சிறுமிகளும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகியிருப்பது தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது.

    இந்த தொடர் சம்பவங்களை அடுத்து, தமிழக முதலமைச்சரால் பெண்களின் பாதுகாப்புக்காகத் தொடங்கி வைக்கப்பட்ட "சிங்கப்பெண்" அதிரடி படை எங்கே போனது? தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி தங்களது கண்டனங்களை மிக வலுவாகப் பதிவு செய்து வருகிறார்கள்..!!!

    English Summary

    Where is the Singappen Squad? Shocking Incidents in Tamil nadu including Tiruvallur! 5 Young Girls Harassed in One Day